2025ஆம் ஆண்டுக்கான வசந்த கால நிகழ்வுகள் நுவரெலியாவில் ஆரம்பம்!

2025ஆம் ஆண்டுக்கான நுவரெலியா வசந்த கால நிகழ்வுகள் நேற்று (01) காலை நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் நுவரெலியா மத்திய சந்தைக்கு முன்பாக உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டன.
இவ்வாறு ஆரம்பித்த நிகழ்வுகள் இம்மாதம் 30ஆம் திகதி வரை தொடர்ந்து இடம்பெறவுள்ளன.
நுவரெலியா மாநகரசபை ஆணையாளர் எச்.எம்.பண்டார தலைமையில் வசந்த கால ஏற்பாட்டுக் குழுவின் கலைகலாச் சார நடன நிகழ்வுகளுடன் ஆரம்பமான இவ் வசந்தக்கால நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக மத்தியமாகாண பிரதான செயலாளர் ஜி. எச்.எம். அஜீத் பிரேமசிங்க உட்பட நுவரெலியா மாவட்ட செயலாளர், நுவரெலியா பிரதேச சபை செயலாளர், இராணுவ அதிகாரி, பொலிஸ் அதிகாரி, கடற்படை அதிகாரி, விமானப்படை அதிகாரி பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டார்.
வழக்கம் போல் நுவரெலியா நகரில் உள்ள பாடசாலை மாணவர்களின் பேண்ட் வாத்திய இசை நிகழ்ச்சியுடனும் பொது அமைப்புகளின் அணிவகுப்பு மரியாதையுடனும் மற்றும் ஊர்திகளின் ஊர்வலத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகின. இந்த ஆரம்ப வைபவத்தில் நுவரெலியா லயன்ஸ் கழகத்தின் அங்கத்தினரின் அணிவகுப்பும், நுவரெலியா சுற்றுலாத் துறையினரின் வாகன அணிவகுப்பும், நுவரெலியா பொலிஸாரின் குதிரை அணிவகுப்பும் இடம்பெற்றதும் குறிப்பிடதக்கது
வருடந்தோறும் நடைபெறும் வசந்த கால கொண்டாட்டத்தில் தொடர்ந்து வரும் நாட்களில் மலர் கண்காட்சி, படகோட்டம், கார் பந்தய ஓட்டப் போட்டி, குதிரைப்பந்தயம், கிரிக்கெட் சுற்றுப் போட்டி, உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி, கிறகரி வாவியில் நீர் விளையாட்டு, சேற்றில் மோட்டார் ஓட்டம், மோட்டார் சைக்கிள் தடைதாண்டல் போட்டி மற்றும் நாள்தோறும் இசை நிகழ்ச்சிகள் என களியாட்ட விழாக்களும் இந்த வசந்த கால விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
எனவே நுவரெலியாவிற்கு வருகைதர விருக்கும் சுற்றுலாபயணிகளின் நன்மைகருதி அத்தியாவசிய தேவைகளை நுவரெலியா மாநகரசபையும், பயணிகளை பாதுகாப்பதற்கான விசேட சேவையை நுவரெலியா பொலிஸாரும் மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, வெளிமாவட்டங்களிலிருந்து நுவரெலியாவிற்கு விசேட போக்குவரத்து பஸ் சேவை நடத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


