பதிவுகள்

துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பெண் உட்பட இருவர் கைது

டி-56 ரக துப்பாக்கி ஒன்று, 113 தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (01) காலை இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹேகித்த வீதி, வத்தளை பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் அறையில் பெண்ணொருவர் தூக்கிட்ட நிலையில் இருப்பதாக வத்தளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் வத்தளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள், விடுதியின் குளியலறையில் பெண்ணொருவர் மயக்கமடைந்த நிலையில் இருப்பதை கண்டறிந்தனர்.

அந்த பெண்ணை மீண்டும் சுயநினைவிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் அவரை பரிசோதித்தபோது, அவரிடம் 6 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் இருந்தமையால் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பெண், 35 வயதுடைய கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், இந்த பெண் வெளிநாட்டில் தங்கியிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் நபரொருவருடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்ததாகவும், போதைப்பொருள் கடத்தல்காரரால் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக அவருக்கு வழங்கப்பட்ட டி-56 துப்பாக்கி மற்றும் 113 தோட்டாக்கள் தொடர்பான தகவல்களும் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரான பெண்ணின் வழிகாட்டுதலின் பேரில், அவர் தங்கியிருந்த அவரது இரண்டாவது திருமணத்தின் கணவரின் ராகம பகுதியிலுள்ள வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸாரால் அந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

டி-56 துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை மறைத்து வைத்திருந்த ஹீன்கெந்த, ராகம பகுதியிலுள்ள வீட்டில் வசிக்கும் சந்தேக நபரான பெண்ணின் 40 வயதுடைய கணவரையும் வத்தளை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *