பதிவுகள்

வட்டுவாகலில் பதற்றம்- களமிறக்கப்பட்ட விஷேட அதிரடிப்படையினர்!

வலை, மற்றும் சட்டவிரோத படகுகளை கைப்பற்றிய நபர்கள் வட்டுவாகல் பகுதிக்கு வந்ததனை தொடர்ந்து இன்றையதினம் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது.

நந்திக்கடல் களப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிரான நடவடிக்கையில் கடற்தொழில் திணைக்களம் , வட்டுவாகல் கடற்படை, கடற்தொழில் இணையம், கடற்தொழில் சங்கங்கள் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத தொழிலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் வட்டுவாகல் களப்பில் இன்று (03.04.2025) 50 வலை தொகுதிகளும், 9 படகுகளும் கைப்பற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த இடத்திற்கு வலை, படகுகளின் உரிமையாளர்கள் 50க்கு மேற்பட்டோர் வட்டுவாகல் பாலத்தடியில் ஒன்று கூடியதனை தொடர்ந்து குறித்த இடத்தில் பதற்றநிலை ஏற்பட்டிருந்தது. இதனால் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தார்கள். அத்தோடு கைது செய்யப்பட்ட ஒரு நபர் கைவிலங்குடன் தப்பியோடியுள்ளார்.
இதனையடுத்தே இன்றையதினம் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது. இதனால் அவ்விடத்திற்கு பொலிஸார், விஷேட அதிரடி படையினர் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களும் மந்துவில் , வலைஞர்மடம் புதுக்குடியிருப்பு பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

குறித்த ஐவரையும் இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது எதிர்வரும் 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். அத்தோடு கைவிலங்குடன் ஓடிய நபரை கைது செய்ய திறந்த பிடியாணையும் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட நீர்வள திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் மோகனகுமார் கருத்து தெரிவிக்கும் போது, குறித்த களப்பில் மூன்றரை இஞ்சிக்கு குறைந்த எந்தவொரு வலையும் பாவிக்க முடியாது, முக்கூட்டு வலை பாவிக்க முடியாது, தங்கூசி வலை அனைத்து இடங்களிலும் தடை, சட்டவிரோத படகு இவ்வாறு தடை செய்யப்பட்ட வலைகள் , படகுகளையே கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றோம்.

நாளாந்தம் இவ்வாறு சட்டவிரோத தொழில்களை கண்காணித்து இல்லாதொழிக்க முயல்கின்றோம். அவ்வாறு இருந்தும் சட்டவிரோத செயற்பாடுகள் குறையவே இல்லை. வட்டுவாகல் களப்பு தற்போதும் நல்லதொரு நிலையில் இருக்கிறது. என்பதற்கு நாளாந்தம் பிடிக்கப்படும் இறால் ஒரு சான்று பொருளாக இருக்கின்றது. முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மிகவும் ஒரு வரப்பிரசாதமாக இருப்பது இந்த நந்திக்கடல் இதனை மக்களோ, திணைக்களமோ, சமூகமோ இதனை அழிவடைய விடுவதனை அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *