இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

தமிழர் தாயகப் பரப்பில் இருக்கின்ற தமிழ் கட்சிகளின் கைகளுக்கு மக்கள் அதிகாரத்தை வழங்க வேண்டும் !

உள்ளூர் அதிகார சபை தேர்தல் – தமிழர் தாயகப் பரப்பில் இருக்கின்ற தமிழ் கட்சிகளின் கைகளுக்கு மக்கள் அதிகாரத்தை வழங்க வேண்டும் – நாவலன் வலியுறுத்து!

நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபை தேர்தலில் வடக்கின் உள்ளூராட்சி மன்றங்களை தமிழர் தாயகப் பரப்பில் இருக்கின்ற தமிழ் கட்சிகளின் கைகளுக்கு மக்கள் அதிகாரத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள சமூக செயற்பாட்டாளரான கருணாகரன் நாவலன், தேசிய மக்கள் சக்தி என்ற போர்வைக்குள் இருக்கின்ற இனவாத ஜே.வி.பியின் கைகளுக்கு சென்றால் அது தமிழ் மக்களின் இருப்புக்கே ஆபத்து என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றையதினம் (06.04.2025) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் மக்களது வாக்குகள் தத்தமது பிரதேசங்களை உள்ளடக்கிய தமிழ் தேசிய கட்சிகளை நோக்கியதாகவே இருப்பது அவசியமானது. இதை மக்கள் உணர்ந்துகொள்வதும் அவசியமாகும்.

ஏனெனில் தமிழ் மக்களின் இருப்பையும் உரிமைகளையும் பறித்து ஜே.வி.பி என்ற வன்முறைக் குழு இன்று தேசிய மக்கள் சக்தி என்ற போர்வையில் தம்மை உருமாற்றிக்கொண்டு தமிழ் மக்களை ஏமாற்ற முற்படுகின்றது.

இந்த வேடதாரிகளின் பொறிக்குள் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் வீழ்த்தப்பட்டதனால் இன்று தமிழரது உரிமைகள் விடயமாகவோ, அரசியல் கைதிகள் விடயமாகவோ அன்றி அபிவிருத்திகள் தொடர்பிலோ தீர்வுகள் எதனையும் பெற்றுக்கொள்ள முடியாது அந்தரிக்கும் நிலையில் இருக்க நேரிட்டுள்ளது.

இதைவிட கடந்த காலங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்றுவந்த மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களைக் கூட இந்த தேசிய மக்கள் சக்தி என்ற ஜேவிபியின் ஆளுமையற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் உள்ளடங்கிய குழுவினர் குழப்பி எமது மக்களின் அடிப்படை தேவைகளை கூட தடுக்க முற்படுகின்றனர்.

அனைவருக்கும் சம உரிமை, சட்டங்களும் அனைத்து மக்களுக்கும் சம்மானவை, ஊழலை இல்லாதொழிப்போம் என்று கோசமிட்டு ஆட்சியை பிடித்தா இந்த வன்முறைக் குழு இன்று தமது உண்மையான முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக மாவீர்ர்களை நினைவு கூரமுடியும் என்றவர்கள் ஆட்சியை பிடித்தபின் நினைவுகூர்ந்த மக்களை கைது செய்து பயங்கரவாத சட்டத்தில் தடுத்து சித்திரவதை செய்கினர்.

மத்தியில் தமது அதிகாரமே இருக்கின்றது என கூறி பிரதேசங்களின் அதிகாரங்களை சூறையாட தற்போது மக்களாகிய உங்களிடம் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் வரக் கூடும். சில சலுகைகளை தரலாம் என்றும் கூற முற்படுவார்கள். அந்த பசப்பு வார்த்தைகளை நம்பி மக்களாகிய நீங்கள் இனியொரு தடவை ஏமாந்துவிடாதீர்கள்.

உள்ளூராட்சி அதிகாரங்கள் அந்த இனவாத தேசிய மக்கள் சக்தி என்ற ஜே்விபியினரிடம் சென்றால் இருக்கின்ற காணி நிலங்கள் கூட எமக்கு இல்லாது போகும் நிலை உருவாகும்.

குறிப்பாக பலாலி விமான நிலையத்தை அடுத்த மூன்று மாங்களுக்குள் அபிவிருத்தி செய்யப்போவதாக கூறுகின்றார்கள். இந்த விமான நிலையம் ஏற்கனவே இந்திய அரசின் அனுசரணையுடன் அபிவிருத்தி செய்யப்பட்டு சர்வதேச விமான நிலையமாக வியாபித்திருக்கின்றது.

இந்நிலையில் அதை மீளவும் அபிவிருத்தி செய்ய போவதாக கூறுவது காணிகளை சுவீகரிப்பதற்கான முயற்சியாகவே பார்க்க வேண்டியுள்ளது. எனவே இவ்வாறான போக்கு உடையவர்களை எமது மக்கில் பிரதேசங்களில் காலூன்ற விடாது எமது மக்களின் தீர்ப்பு தமிழ் தரப்பின்பால் இருப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *