ஆட்டிசம் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு – 9,000ற்கும் அதிகமான சிறுவர்கள் அடையாளம்

இயலாமையுடைய சிறுவர்களைக் கையாழ்வது தொடர்பில் கல்வியியல் கல்லூரியில் கற்றுவரும் ஆசிரியர்களுக்கு ஆறு மாத பயிற்சியை வழங்குவதற்கு முன்மொழியப்பட்டிருப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் மூலம் இயலாமை உடைய சிறுவர்களை சாதாரண சிறுவர்களுக்கு சமமாக நடத்துவதற்கு தேவையான அறிவு மற்றும் மனப்பான்மைகளை ஆசிரியர்களுக்கு வழங்க முடியும் என நம்புவதாகவும் அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு கடந்த 08ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயங்கள் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த அதிகாரிகள், இலங்கையில் ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகக் குறிப்பிட்டனர். இது தொடர்பான கணக்கெடுப்பிற்கு அமைய 9,000ற்கும் அதிகமானவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது அடையாளம் காணப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.
எனவே, சரியான அடையாளம் காணப்படல்கள் இல்லாமையாலேயே சிறுவர்கள் இயலாமையுடைய நபர்களாக மாறவேண்டியிருப்பதாக குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.
முன்பிள்ளைப் பருவத்தில் ஆட்டிசம் உடைய சிறுவர்களை அடையாளம் காண வேண்டும் என்றும், அவ்வாறு அடையாளம் கண்டுகொண்டல் மாத்திரமே அவர்களை ஆரோக்கியம் மிக்க சிறுவர்களாக வளர்த்தெடுக்க முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்காக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் மூன்று மாதிரி பகல்நேர பராமரிப்பு மையங்களை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தலைவர் கூறினார். இதற்காகத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்கு ஒரு குழுவை நியமிக்கவும் முன்மொழியப்பட்டது. இதன் மூலம், அந்தக் குழந்தைகள் பொருத்தமான வளர்ச்சி நிலைகளுக்கு வழிநடத்தப்படுவார்கள் என்றும் நம்பப்படுகிறது.