பதிவுகள்

தமிழ் மக்கள் படுகொலைகளை விசாரிக்க விரும்பாத அரசாங்கம் செம்மணி மனிதப் புதைகுழியை தோண்டுவதில் தயக்கம்.!

யுத்த காலத்தில் போர் நிறுத்தத்தை விரும்பாத அப்போதைய ஜேவிபி என்கின்ற தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப் படு கொலைகளை மூழ்கடிக்கும் முயற்சியே செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வை மேற்கொள்வதில் தயக்கம் காட்டுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சாட்டுகிறார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை இராணுவத்தினரால் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சுமார் 600க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் யாழ் செம்மணியில் புதைக்கப்பட்டமை ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது.

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு இடம்பெற்ற காலப்பகுதியில் குறித்த பகுதி மறைக்கப்பட்டு இரவோடு இரவாக கனகர வாகனங்கள் மூலம் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதனை மூடி மறைப்பதற்கும் ஆதாரங்களை அழிப்பதற்கும் பல்வேறு முயற்சிகள் அப்போதைய அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அதேபோன்று தற்போதைய ஜேவிபி என்கின்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அண்மையில் செம்மணி சிந்துப் பாத்தி மயானத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதனை அகழ்வதற்கு அனுமதி வழங்காது இழுத்தடிப்பு செய்கின்றனர்.

அரசாங்கத்தை பொறுத்தவரையில் மனிதப் புதகுழி ஒன்றை அகழ்வதற்கு 20 இலட்சம் ரூபாய் என்பது சிறிய தொகை அதனை வழங்குவதற்கு கூட தற்போதைய அரசாங்கம் அக்கறை செலுத்தாது இழுத்தடிப்பு செய்கிறது.

குறித்த மனித புதைகுழியை தமிழ் பேராசிரியர் ஒருவர் ஆய்வு செய்வதற்காக அமர்த்தப்பட்ட நிலையில் அவரைக் கூட தற்போதைய அரசாங்கம் மாற்றுவதற்கான காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருவதாக அறிய கிடைத்துள்ளது.

தற்போதைய தேசிய மக்கள் சக்தி என்கின்ற ஜே.வி.பி யினர் தொடர்பில் தமிழ் மக்கள் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

இறுதி யுத்த காலத்தில் போர் நிறுத்தத்தை விரும்பாத இராணுவத்திற்கு ஆட்களை திரட்டி தமிழ் மக்களுக்கு எதிராக இனப் படு கொலைகளை மேற்கொண்டவர்கள்.

பெயரை மாற்றிக் கொண்டு தமிழ் மக்களுக்கான தீர்வை தரப் போகிறோம் என மக்களை ஏமாற்றி தமது சிங்கள ஏகாபத்திய நிகழ்ச்சி நிரல்களை அரங்கேற்றிய வண்ணம் உள்ளர்.

இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் இனப் படு கொலை செய்யப்பட்டதும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலும் சர்வதேச விசாரணைகளை மூடி மறைக்கும் செயற்பாடுகளில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றனர்.

தேசிய மக்கள் சக்தியினர் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் என்பதற்கு தற்போது பட்டலந்த விவகாரம் மிகச் சரியான உதாரணமாகும்.

அதாவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரட்டை வேடத்தை தமிழ் மக்கள் அறிந்த விவகாரமாக பட்டலந்த விவகாரத்தை கொள்ளலாம்.

பட்டலந்த வீட்டு திட்ட குடியிருப்பில் சித்தரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட தமது தோழர்கள் தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேச தரப்புக்களை இணைத்து மேற்கொள்வதற்கு தயார் என கூறுகிறார்கள்.

இதிலிருந்து என்ன விளங்குகிறது இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான இனப் படு கொலைகளை சர்வதேச நீதியில் விசாரிப்பதற்கு மறுத்து உள்ளூர் விசாரணை மூலம் தீர்வு என கூறுகிறார்கள்.

ஆனால் பட்டலந்தவில் படு கொலை செய்யப்பட்ட தமது ஜே.வி.பி தோழர்களுக்கு சர்வதேச தரப்புக்களை அழைத்து விசாரணைக்கு தயார் என கூறும் தேசிய மக்கள் சக்தியினர் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட படு கொலைகளுக்கும் போர்க் குற்றங்களுக்கும் ஏன் சர்வதேச விசாரணைகளுக்கு மறுக்கிறார்கள்.

தமது அரசியல் நோக்கத்திற்காக பட்டலந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள தேசிய மக்கள் சக்தியினர் செம்மணி மனிதப் புதை குழியை தோண்டுவதற்கு கூட சிறிய பணத்தொகையை வழங்க பின்னிக்கும் இவர்கள் புதை குழி விவகாரத்தை சர்வதேசத்திற்கு கொண்டு செல்லத் தயாராக இருக்கிறார்களா?

ஆட்சிப் பொறுப்பை ஏற்று ஆறு மாதங்கள் கடந்து செல்கின்ற நிலையில் ஜே.வி.பி என்கின்ற தேசிய மக்கள் சக்தி தொடர்பில் தத்துவார்த்த ரீதியாக தமிழ் மக்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள்.

ஆகவே தமிழ் மக்களை தத்துவார்த்த ரீதியாக அழிப்பதற்கு பல்வேறு செயற்திட்டங்களை வகுத்துக் கொடுத்த தற்போதைய தேசிய மக்கள் சக்தியை தமிழ் மக்கள் விரட்டியடிப்பதற்கான காலம் கனிந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *