பிள்ளையான் – கம்மன்பில கூட்டணி அரசியல் சூழ்ச்சி; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

பிள்ளையானின் வழக்கில் சட்டத்தரணியாக உதய கம்மன்பில ஆஜராகியுள்ளார். கம்மன்பில வழக்கில் வாதாடுவதை நாட்டு மக்கள் கண்டதில்லை. ஆனால், பிள்ளையான் அவரின் சட்டத்தரணியாக தெரிவு செய்திருக்கிறார்.
பிள்ளையானின் வழக்கில் உதய கம்மன்பில ஆஜராவது வெறுமனே அரசியல் பழிவாங்கல் இல்லை. இதுவொரு அரசியல் சூழ்ச்சியாகும்’’ என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
தலைக்கு எண்ணெய் வைக்கும் அரச விழா அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் பங்கேற்புடன் கண்டி ஸ்ரீ மஹா நாத விகாரையில் நேற்று(16) இடம்பெற்றது. அதன் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
‘‘நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர். பொரு ளாதாரத்தில் ஓரளவு ஸ்திரத்தன்மை ஏற்பட் டுள்ளது. அதற்காக பொருளாதாரம் முழுமை யடைந்துள்ளது என்று என்னால் கூற முடியாது. இருந்தபோதும் அரசாங்கம் என்ற அடிப்படையில் அதுதொடர்பில் தொடர்ந்து கவனம் செலுத்தி மக்களின் வாழ்வாதாரத்தில் தாக்கம் செலுத்தும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை பெற்றுக்கொடுக்க நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறோம். தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகளுக்கு பதில் கொடுத்துள்ளோம். பொருளாதார நிவாரணங்களை பெற்றுக்கொடுத்துள்ளோம். அரச பணியாளர்களுக்கும் தனியார் துறையினருக்கும் சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுத்துள்ளோம். இவ்வாறான மாற்றங்களே மக்களின் வாழ்வாதாரத்தில் தாக்கம் செலுத்தியுள்ளது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு பெரும் ஆதரவு கிடைக்குமென நாங்கள் அதிகபட்சம் நம்புகிறோம். பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை நியமித்துக்கொள்வதற்காக இந்தத் தேர்தலில் நாங்கள் போட்டியிட வில்லை. நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக பெரும் அபிவிருத்தி கொள்கையை ஜனாதிபதி முன்வைத்திருக்கிறார். அவற்றை நடைமுறைப் படுத்துவதற்கு அரச நிறுவனங்களின் அதிகாரம் தேவை. அதனை புரிந்து மக்கள் அதிகாரத்தை பெற்றுக்கொடுப்பார்கள். அதில் சந்தேகம் இல்லை.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விரைந்து செயற்பட்டு வருகிறது. குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் அதன் விசாரணை நடவடிக்கைகளை விரைவுபடுத்தியுள்ளது. சட்ட மா அதிபர் திணைக்களத்தினூடாக மேன்முறையீடும் செய்யப்பட்டுள்ளது. சட்டரீதியாக மேற்கொள்ள வேண்டிய விடயங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இலஞ்ச, ஊழல், கொலை, அரசியல் தவறுகள் எந்தளவுக்கு பாரதூரமானவை என்றால், எந்தளவு வலையமைப்பாக செயற்படுகின்றது என்பதை சிந்திக்க வேண்டும்.
தற்போது பிள்ளையானின் சட்டத்தரணி உதய கம்மன்பில. கம்மன்பில வழக்கில் வாதாடுவதை நாட்டு மக்கள் கண்டதில்லை. ஆனால், பிள்ளையான் அவரின் சட்டத்தரணியாக தெரிவு செய்திருக்கிறார். பிள்ளையானின் வழக்கை கம்மன்பில தெரிவு செய்திருக்கிறார். இது வெறுமனே அரசியல் பழிவாங்கல் இல்லை. இது அரசியல் சூழ்ச்சி. அந்த சூழ்ச்சியின் நூல்பந்தே இப்போது வெளிபட்டு வருகிறது’’ என்றார்.