நுரைச்சோலையில் மின் உற்பத்தி இயந்திரம் ஒன்று செயலிழப்பு!

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி இயந்திரம் ஒன்று செயலிழக்கம் செய்யப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலத்தில் தினசரி மின்சாரத் தேவை குறைவடைந்ததால், குறித்த இயந்திரம் செயலிழக்கம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார்.
ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஒரு மின் பிறப்பாக்கியை செயலிழக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் நாட்களில் மின்சார தேவை படிப்படியாக அதிகரித்து வருவதனால், செயலிழந்த மின் உற்பத்தி இயந்திரம் ஏப்ரல் 21 ஆம் திகதிக்குள் செயற்படுத்தப்பட்டு தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் மின் உற்பத்தி நிலையங்களும் செயலிழக்கம் செய்யப்பட்டுள்ளன.
நீர் மின் நிலையங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகவும் இலங்கை மின்சார சபை கூறுகிறது.