உக்ரைன் – நீடிக்குமா சமாதானம்?
எழுதுவது : சுவிசிலிருந்து சண் தவராஜா
ஒரு வழியாக ரஸ்ய மற்றும் உக்ரைன் ராஜதந்திரிகள் பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்துவிட்டார்கள். விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிப்பதற்கு ஒப்ப துருக்கி நகரான இஸ்தான்புல்லில் முதற்கட்டப் பேச்சுக்கள் நடந்தேறியுள்ளன. மே 16ஆம் திகதி நடைபெற்ற பேச்சுக்களுக்கு முதல்நாளே ரஸ்யத் தரப்பு காத்திருந்த போதிலும் உக்ரைன் தரப்பு வருகை தராத காரணத்தினால் அன்றைய தினம் பேச்சுக்கள் இடம்பெறாமல் போய்விட்டது.

இந்தப் பேச்சுவார்த்தைகள் சம்பந்தமான அறிவிப்பு முதல் தொடரும் சம்பவங்களைப் பார்க்கையில் இரண்டு தரப்புமே மனப்பூர்வமான விருப்பமின்றி நிர்ப்பந்தத்தின் பேரிலேயே பேச்சுக்களில் பங்கெடுத்துக் கொள்வதாகத் தெரிகின்றது. இதுவே பேச்சுக்களின் முடிவில் தீர்வு ஒன்று எட்டப்படும் வாய்ப்பு இருக்காது, ஒப்புக்காக அப்படி ஏற்பட்டால் கூட அது நீண்ட நாள் தாக்குப் பிடிக்காது என்ற பலத்த சந்தேகத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது.
எனினும், இரண்டு தரப்பும் இறந்த படையினரின் உடலங்களை பரஸ்பரம் கையளிப்பது தொடர்பான ஒரு உடன்பாட்டை எட்டியிருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. ஒவ்வொரு நாடும் தம்மிடம் உள்ள ஆயிரம் வரையான உடலங்களைக் கையளிப்பதற்கு இணங்கியுள்ளன. அதேவேளை, உத்தேச போர் நிறுத்த நிபந்தனைகள் தொடர்பிலான விபரங்களையும் இருதரப்பும் பரிமாறிக் கொள்ள இணங்கியுள்ளன. அத்தோடு அடுத்த கட்டப் பேச்சுக்கள் தொடர்பிலான தகவல்களும் பரிமாறிக் கொள்ளப்பட்ட உள்ளதாகத் தெரிகின்றது.
அமெரிக்க அதிபராக இரண்டாவது தடவை பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் அவர்களின் தேர்தல் பிரகடனங்களுள் ஒன்று உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது. தனது சக்திக்கு உட்பட்ட அனைத்து வளங்களையும், தந்திரோபாயங்களையும் பாவித்து அந்த இலக்கை அடைவதற்கு அவர் கடின முயற்சி எடுத்து வருகிறார் என்பதைப் பார்க்க முடிகிறது. அது மாத்திரமன்றி வழக்கமான மேற்குலகின் பார்வைக் கோணத்தில் இருந்து விவகாரங்களை அணுகாமல் அதிலிருந்து விலகி ஓரளவு யதார்த்தமாக அவர் சிந்திப்பதையும் காண முடிகின்றது. அமெரிக்கா தவிர்ந்த மேற்குலகின் பார்வையில் இது புட்டின் சார்புக் கோணமாகத் தென்படுவதும் வியப்பாக இல்லை.
ஆனால், இந்த விடயத்தில் பிரதானமாக எழும் கேள்வி மூன்று வருடங்களாக போரில் ஈடுபட்டுவரும் இரண்டு நாடுகளை அச்சுறுத்திப் பணிய வைத்துவிட முடியுமா என்பதே.
ஒப்பீட்டு அடிப்படையில் சிறிய நாடான உக்ரைன் கூட ட்ரம்பின் வெருட்டல்களுக்குப் பணிந்துபோக விரும்பாமல் முறுக்கிக்கொண்டு நிற்பதை கடந்த பெப்ரவரியில் அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த இரு நாட்டு ஜனாதிபதிகளின் சந்திப்பின் போது தெளிவாகப் பார்க்க முடிந்தது. இரு நாடுகளுக்கும் இடையில் இறுதியாகக் கைச்சாத்தான அரியவகை கனிம வளங்கள் தொடர்பிலான ஒப்பந்தம் கூடப் பல இழுத்தடிப்புகளுக்குப் பின்பே சாத்தியமானது. இஸ்தான்புல் பேச்சுக்களில் கலந்து கொள்வதற்குக் கூட 30 நாள் போர் நிறுத்தத்துக்கு ரஸ்யா சம்மதிக்க வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஸெலன்ஸ்கி இறுதிக் கணம் வரை வலியுறுத்திக் கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது.
ஒரு குறுகிய காலத்திலேயே எண்ணிக் கணக்கில்லாத பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்ட ரஸ்யா, அவற்றில் இருந்து தாக்குப் பிடித்து தனது வல்லமையை நிரூபித்துள்ள நிலையில் மென்மேலும் பொருளாதாரத் தடைகளையே ஒரு அழுத்தக் கருவியாகப் பாவிக்கப் போவதாக மேற்குலகம் தொடர்ந்து சொல்லி வருவது சிறுபிள்ளைத்தனமானது. அது மாத்திரமன்றி உக்ரைன் போரின் ஆரம்பத்தில் இருந்ததை விடவும் உலக நாடுகளின் ஆதரவு ரஸ்யாவுக்கு அதிகரித்து உள்ளமையையும் பார்க்க முடிகின்றது. இந்நிலையில் ரஸ்யாவைத் தனிமைப்படுத்துவது என்ற சொல்லாடலும் வலுவிழந்து போவதைக் காண முடிகின்றது.
இரு தரப்புப் பேச்சுக்களைத் தொடர்ந்து 19ஆம் திகதி திங்கட்கிழமை டொனால்ட் ட்ரம்ப் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசி உரையாடல் ஒன்றை நிகழ்த்தி உள்ளார். இரண்டு மணி நேரம் நீடித்த இந்த உரையாடல் ட்ரம்ப் பதவியேற்தன் பின்னர் நடைபெறும் இரண்டாவது தொலைபேசி உரையாடலாகும். இந்தத் தொலைபேசி உரையாடல் மிகவும் சுமூகமாகவும் சிநேகபூர்வமாகவும் நடைபெற்றதாக இரண்டு தலைவர்களும் தெரிவித்து உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஸெலன்ஸ்கி, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவி உர்சுலா வொன் டெர் லெயென், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், யேர்மன் அதிபர் பிரிடெரிக் மெயற்ஸ், பின்லாந்து ஜனாதிபதி அலெக்சான்டர் ஸ்ரப் ஆகியோரை தெலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ட்ரம்ப் புட்டினுடன் நடைபெற்ற உரையாடல் தொடர்பாக விளக்கமளித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. புட்டின் மற்றும் ஸெலன்ஸ்கி ஆகியோருடன் உரையாடலை நிகழ்த்துவது மாத்திரமன்றி ஸெலன்ஸ்கியைக் கொம்பு சீவி விடும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடனும் பேச வேண்டிய நிலையில் ட்ரம்ப் உள்ளதைப் பார்க்க முடிகின்றது.
இதனை வேறு விதத்தில் புரிந்து கொள்வதானால் ட்ரம்பின் சமாதான முயற்சிகளுக்கு எதிராகச் செயற்படக் கூடியவர்கள் என சில ஐரோப்பியத் தலைவர்களை அவர் இனங்கண்டுள்ளார் எனப் பார்க்கலாம்.
2022ஆம் ஆண்டு மே மாதத்திலும் இதேபோன்ற ஒரு சங்கதி நிகழ்ந்தது. இஸ்தான்புல்லில் நடைபெற்ற தொடர் பேச்சுக்களின் முடிவில் போரை நிறுத்திக் கொள்வதற்கு ரஸ்யாவும் உக்ரைனும் இணங்கி வந்தவேளை, உக்ரைனை உசுப்பி விட்டு உடன்படிக்கையில் இருந்து வெளியேறும் கைங்கரியத்தைக் கச்சிதமாக முடித்தவர் அப்போதைய பிரித்தானியப் பிரதமரான போரிஸ் ஜோன்சன் எனப் பரவலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. போரிஸ் ஜோன்சன் இந்தக் குற்றச்சாட்டை மறுத்திருந்த போதிலும் உக்ரைன் சார்பில் பேச்சுக்களுக்குத் தலைமை வகித்த டேவிட் அரக்காமியா அதனை பின்னாளில் உறுதி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ஒரு தடவை அது போன்ற காட்சி அரங்கேறிவிடக் கூடாது என்ற கரிசனையுடன் ட்ரம்ப் காய்களை நகர்த்தி வருவதைப் பார்க்க முடிகின்றது இந்த வேளையில் ட்ரம்பின் இத்தகைய முயற்சி உண்மையில் வெற்றி அளிக்குமா என்ற நியாயமான சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
அணுவாயுத வல்லரசான ரஸ்யாவை போரின் மூலம் தோற்கடிக்க முடியாது என்ற வலுவான நிலைப்பாட்டை தற்போதைய அமெரிக்க நிர்வாகம் கொண்டுள்ளது. இந்த யதார்த்தத்தை ஐரோப்பிய நாடுகள் புரிந்து கொண்டாலும் போரை நீடிப்பதன் ஊடாக ரஸ்யாவை பலவீனப்படுத்த முடியும் என அவை நம்புகின்றன. தங்கள் இலக்கை அடைவதற்காக அவை உக்ரைனை பலிக்கடாவாகக் கருதிச் செயற்படுகின்றன. அமெரிக்காவுக்குப் போட்டியாக பொருளாதார வல்லரசாக துரித வளர்ச்சி கண்டுவரும் சீனாவை நோக்கித் தனது சக்தி யாவற்றையும் ஒருமுகப்படுத்த நினைக்கும் அமெரிக்கா ரஸ்ய-உக்ரைன் போரை துரிதமாக முடித்துவைக்கத் துடியாய்த் துடிக்கிறது. அது மாத்திரமன்றி, இந்தப் போர் தொடர்ந்து நீடித்தால் ரஸ்யாவும் சீனாவும் மென்மேலும் நெருங்கிச் சென்று விடுமோ என்ற அச்சமும் அமெரிக்கத் தரப்பில் உள்ளது. அமெரிக்காவின் இந்த மனப்போக்கை ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் புரிந்து கொள்ளவில்லையோ அல்லது அது தொடர்பில் அவர்களுக்கு அக்கறை இல்லையோ என்ற ஐயமும் அமெரிக்கத் தரப்பில் இருப்பதைப் பார்க்க முடிகின்றது.
போர் முடிவுக்கு வருவது மகிழ்ச்சியே. பெறுமதியான மனித உயிர்கள் இதன் மூலம் காப்பாற்றப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால், சமாதானம் என்பது இரண்டு தரப்புக்கும் இடையிலான நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக வேண்டும். அத்தகைய சமாதானமே நிலைக்கும். ஆனால், ரஸ்ய-உக்ரைன் விடயத்தில் இருதரப்பு நம்பிக்கை இருப்பதாகத் தெரியவில்லை. அத்தகைய பரஸ்பர நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் கூட மனப்பூர்வமாகச் செய்யப்படுவதாகத் தெரியவில்லை. அழுத்தம் காரணமாக ஒரு சமாதானச் சூழல் ஏற்படுத்தப்பட்டால் கூட அது நீடிப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது போன்றே தற்போதைய சூழல்கள் தென்படுகின்றன. இதுவே கசப்பான கள யதார்த்தம்.