இதுவரை நடந்த மோதல்களில் மந்தமாக விளையாடிய செனகல் ஆபிரிக்கக் கோப்பையின் இறுதி மோதலுக்குத் தயாரானது.
புதன் கிழமையன்று நடந்த அரையிறுதி மோதலில் செனகல் அணி இதுவரை நடந்த ஆபிரிக்கக் கோப்பைக்கான ஆட்டங்களில் தாம் காட்டாத திறமையைக் காட்டி விளையாடியது எனலாம். மோதலின் நான்கு கோல்களும் 70 – 90 வரையிலான நிமிடங்களில் இரண்டு அணிகளாலும் போடப்பட்டன. செனகலுக்கும் ஆபிரிக்கக் கோப்பைக்கும் இடையே இப்போது இருக்கும் இடைவெளி இன்றைய அரையிறுதி ஆட்டத்தில் சந்திக்கப் போகும் எகிப்தும், மோதல்கள் விளையாடப்படும் நாடான கமரூன் அணியும் தான்.
ஆபிரிக்கக் கோப்பைக்கான அரையிறுதி மோதலின் முதல் பாதியில் புர்க்கினோ பாசோ அணி பரமான அரண் அமைத்து செனகல் அணிக்கு ஈடாக விளையாடியது. இதுவரை நடந்த மோதல்களில் தனது பிரத்தியேகத் திறமையைக் காட்டி மற்றைய அணிகளுக்குச் சிம்ம சொப்பனமாகவே இருந்து வந்த புர்க்கினோ பாசோவின் வலைக்குள் பந்தைப் போட செனகல் அணி எடுத்த முயற்சிகளெல்லாம் விரயமாயின.
ஆட்டத்தின் 70 நிமிடத்தில் செனகலின் கலிடூ கௌலிபலி புர்க்கினோ பாசோவின் வலைக்கு வெளியே தன்னைச் சுற்றிப் பலரும் கூடியிருக்கும் போது லாவகமாகப் பந்தைக் கட்டுப்படுத்தி தன் தலைக்கு மேலாகப் பின்னால் வலைக்கு அருகில் நின்ற அப்டூ கியால்லோவிடம் கொடுத்தார். கியால்லோ தவறேயின்றி அதை வலைக்குள் உதைத்துவிட செனகலுக்கு 1- 0. 76 வது நிமிடத்தில் செனகல் தனது கணக்கை 2-0 ஆக்கியது. செனகலின் நட்சத்திரம் சாடியோ மனே பந்தைக் கைப்பற்றி அதை பம்பா டியேங்கிடம் கொடுக்க அவர் அதை புர்க்கினோ பாசோ வலைக்குள் தப்பாமல் போட்டுவிட்டார்.
விடுவார்களா, 2013 இல் இரண்டாமிடத்தையும் 2017 இல் மூன்றாமிடத்தையும் பெற்ற புர்க்கினோ பாசோ அணியினர்? இஸ்ஸா காபொரே தனக்கு பிளாட்டி டூரே தட்டி விட்ட பந்தை செனகலுக்கு எதிராக வலைக்குள் போட 2-1 என்றானது நிலைப்பாடு.
அரையிறுதி மோதல் முழுவதும் தனது வேகத்தாலும், லாவகத்தாலும் எல்லோரையும் கவர்ந்ததுடன் இறுதியில் மோதலின் நட்சத்திரம் என்ற கௌரவத்தையும் பெற்ற செனகலின் சாடியோ மனோ 87 வது நிமிடத்தில் புர்க்கினோ பாசோவின் வலைக்குள் பந்தைப் போட்டதும் அந்த மோதலின் காற்றுப் போய்விட்டது. 3 – 1 என்ற வித்தியாசத்தில் வெற்றிபெற்றது செனகல்.
சாள்ஸ் ஜெ. போமன்