வாகனங்களுக்கான மின்கலத் தயாரிப்புக்கான மேலுமொரு தொழிற்சாலை சுவீடன் நாட்டில் கட்டப்படவிருக்கிறது.
வாகனங்களுக்கான எரிசக்தி விரைவில் மின்சாரமாகவே இருக்கும் என்று உலக நாடுகளும், வாகனத் தயாரிப்பாளர்களும் தீர்மானித்து விட்டார்கள். அதையடுத்து, மின்சாரத்தை உள்வாங்கும் மின்கலங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளைக் கட்டும் திட்டங்கள் ஐரோப்பாவில் பரவலாக எழுந்திருக்கிறது. அப்படியான மின்கலங்களைத் தயாரிப்பதில் முன்னணி நாடுகளிலொன்று சுவீடன் ஆகும்.
நோர்த்வோல்ட் என்ற சுவீடிஷ் நிறுவனம் ஏற்கனவே நாட்டின் வடக்கிலிருக்கும் ஷெலப்தியோ நகரில் கட்டியெழுப்பி ஓரிரு மாதங்களுக்கு முன்னர் தனது முதல் கட்டத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது. வாகனத் தயாரிப்பாளர்களும் தமக்குத் தேவையான, பிரத்தியேக மின்கலங்களைத் தாமே தயாரிக்க முற்பட்டு வருகிறார்கள். அவர்கள் அதற்காக வெவ்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களுடன் கூட்டுச்சேர்ந்திருக்கிறார்கள்.
சுவீடனில் ஏற்கனவே தனது தயாரிப்பை ஆரம்பித்து விட்ட நோர்த்வோல்ட் நிறுவனத்துடன் கூட்டுச்சேர்ந்து வொல்வோ வாகன நிறுவனம் மேலுமொரு தொழிற்சாலையை ஆரம்பிக்கவிருக்கிறது. இத்தொழிற்சாலை வொல்வோ வாகனத்தின் தொழில்நுட்பம், தயாரிப்புகளின் மையமான யொத்தபோர்க் நகரில் கட்டப்படும் என்று வெள்ளியன்று அறிவிக்கப்பட்டது. சூழலைப் பாவிக்காத முறையில் தயாரிக்கப்பட்ட மின்சாரத்திலேயே இயங்கும் விதமாக அந்தத் தொழிற்சாலை கட்டப்பட்டுச் செயற்படும் என்று நிர்வாகம் தெரிவித்தது. அந்தத் தொழிற்சாலை 3,000 க்கும் அதிகமானோருக்குத் தொழில் வாய்ப்புக் கொடுக்கும் என்று கணிக்கப்படுகிறது.
அத்தொழிற்சாலை தவிர மூன்றாவதாக இன்னொரு தொழிற்சாலையும் நோர்வே நிறுவனம் ஒன்றின் முதலீட்டில் சுவீடனில் கட்டப்படும் என்றும் தெரியவருகிறது. கட்டப்பட்டு வரும் இத்தொழிற்சாலைகளுக்கு, ஐரோப்பிய ஒன்றியமும், சுவீடிஷ் அரசும் ஆரம்பக் கட்டத்தில் மான்ய உதவி வழங்குவார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்