கொரோனாக்காலத்தைக் கடந்து ஏப்ரல் முதலாவது நாளில் மலேசியா தனது எல்லைகளைத் திறக்கவிருக்கிறது.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் மார்ச் 18 ம் திகதியன்று கொரோனாத் தொற்றுக்கள் பரவுவதைத் தடுக்க மலேசிய அரசு தனது எல்லைகளை மூடியது. அவற்றை வெளிநாட்டுப் பயணிகளுக்கு முழுவதுமாக வரும் ஏப்ரம் முதலாம் திகதியன்று திறக்கவிருப்பதாக பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கூப் பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் அறிவித்தார்.
நாட்டின் எல்லைகள் வெளியாருக்குத் திறக்கப்படும் அதே சமயம் நாட்டின் வியாபார தலங்கள், கேளிக்கைத் தலங்கள், மத தலங்களுக்கும் விஜயம் செய்யக்கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அவைகள் திறந்திருக்கும் நேரங்களில் இதுவரை போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் இலகுவாக்கப்படும்.
மலேசியாவுக்குள் நுழையும் பயணிகள் ஏற்கனவே கொவிட் 19 தடுப்பு மருந்துகளைப் பெற்றிருந்தால் அவர்கள் தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை. அவர்கள் இணையத்தில் MySejahtera செயலி மூலம் தமது நகர்வுகளை மலேசியாவில் கண்காணிக்கப் பதிவுசெய்துகொண்டால் போதுமானது.
பிரயாணிகள் மலேசியாவுக்கு வர இரண்டு நாட்களுக்கு முன்னர் (RT-PCR) பரிசோதனை செய்து கொண்ட சான்றிதழைச் சமர்ப்பித்து, நாட்டினுள் நுழைந்த 24 மணிகளுக்குப் பின்னர் மேலுமொரு பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டாதவர்கள் நாட்டுக்குள் நுழைய முதல் அதற்கான காரணச் சான்றிதழை மருத்துவரிடமிருந்து பெற்றுக்கொண்டு வரமுதல் நுழையும் அனுமதி பெறவேண்டும். நாட்டினுள் அவர்கள் தனிமைப்படுத்தலும் செய்துகொள்ளவேண்டும்.
சாள்ஸ் ஜெ. போமன்