இரண்டாவது கொரோனாத்தொற்று அலை ஆபிரிக்காவை வாட்டி வருகிறது.

முதலாவது முறை கொரோனா வியாதி பரவ ஆரம்பித்தபோது ஆபிரிக்க நாடுகள் மோசமாகப் பாதிக்கப்படவில்லை. ஆனால், இரண்டாவது முறையாக சமீப வாரங்களில் பரவிவரும் வியாதி பல ஆபிரிக்க நாடுகளின் மக்கள் ஆரோக்கிய சேவைகளின் எல்லைகளை நொறுக்கி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. 

அதேசமயம் அந்த நாடுகள் தமக்குத் தேவையான தடுப்பு மருந்துகளை வாங்கும் வசதியில்லாததால் இன்னும் தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கவும் இயலவில்லை. திரிபடைந்த கொரோனாக்கிருமித்தாக்குதல் வேகமான பரவலை ஏற்படுத்தியிருக்கிறது. தினசரி நோய்ப்பாதிப்பு ஏற்படுகிறவர்கள் எண்ணிக்கை 20,000 க்கும் அதிகம். இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை 38,000 பேர்.

பரவலால் ஆபிரிக்காவில் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடான தென்னாபிரிக்கா தனது நாட்டின் மருத்துவ சேவைகள் வேகமாகப் பரவிவரும் அளவுக்கு ஈடுகொடுக்காது என்று விசனமடைந்திருக்கிறது. 

முதல் பரவலின்போது தென்னாபிரிக்கா போன்ற கடுமையான நாட்டு முடக்கத்தைக் கொண்டுவந்த ருவாண்டாவிலும் பரவல் அதிகரிப்பதால் தலைநகரான கிகாலி முழுவதும் பொதுமுடக்கம் மீண்டும் கொண்டுவரப்பட்டிருக்கிறது. 

கானா, செனகல், நைஜீரீயா, கென்யா ஆகிய நாடுகளிலும் நிலைமை மோசமாகி வருவதாக அரசுகள் அறிவிக்கின்றன. வறிய நாடுகளுக்கான தடுப்பு மருந்துகளைக் கிடைக்கச் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட கொவக்ஸ் திட்டம் மூலம் அவர்களுக்கு இதுவரை உதவியெதுவும் கிட்டவில்லை.

எனவே ஆபிரிக்க நாடுகளின் ஒன்றியம் 270 மில்லியன் தடுப்பு மருந்துகளை வாங்குவதற்காக திட்டமிட்டிருக்கிறது. அவர்களுக்கு அந்த மருந்துக்கான விலை 3 – 10 டொலர்களாக இருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *