வரலாறு காணத பட்டினியை எதிர்கொள்ளும் ஆபிரிக்க நாடுகள், அகதிகள் அலைக்குப் பயப்படும் ஐரோப்பா.

வறிய ஆபிரிக்க நாடுகள் பலவற்றில் மக்களிடையே பசி, பட்டினி படு வேகமாக அதிகரித்து வருவதாக அப்பிராந்தியத்தின் ஒக்ஸ்பாம் உதவி அமைப்புகளின் அதிகாரி அஸ்ஸலாமா சிடி குரல் கொடுக்கிறார். இதுவரை தான், என்றுமே கண்டிராத அளவில் வீதிகளில் பிச்சையெடுப்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களில் அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிடுகிறார். சகல வயதைச் சேர்ந்தவர்களும் பிச்சையெடுக்க வீதிக்கு இறங்கியிருக்கும் கூட்டத்தில் அதிகரித்திருக்கிறார்கள்.

சோமாலியா, எத்தியோப்பியா, கென்யா ஆகிய நாடுகளிலேயே உணவுத் தட்டுப்பாடும் பஞ்சமும் படு வேகமாக அதிகரித்திருக்கின்றன. அதைத் தவிர சஹேல் பிராந்தியம் எனப்படும் சஹாராவை அடுத்துள்ள பகுதிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

ஏற்பட்டிருக்கும் நிலைமைக்கு முக்கிய காரணம் உலகளாவிய நிலையில் மாறிவரும் காலநிலையின் பாதிப்புகளாகும். காலநிலை மாற்றம் குறிப்பிட்ட பகுதிகளையே முதல் கட்டத்தில் பெருமளவில் பாதிக்கும் என்பது ஏற்கனவே எச்சரிக்கப்பட்டு வந்த விடயமாகும். 

அதற்கும் மேலான பாரத்தை ஏற்படுத்தியிருக்கிறது ரஷ்யா – உக்ரேன் போர். குறிப்பிட்ட நாடுகள் வழக்கமாக அவ்விரு நாடுகளிடமிருந்தே தமக்குத் தேவையான தானியங்களை இறக்குமதி செய்து வந்தன. ஆனால்,  போர் காரணமாக அந்த நாடுகளின் இருப்பிலிருக்கும் உணவுத்தானியங்கள் ஏற்றுமதி செய்யப்பட முடியாமல் தடைப்பட்டிருப்பதால் வறிய ஆபிரிக்க நாடுகளின் வயிற்றில் கடினமான அடி விழுந்திருக்கிறது.

நிலைமையைச் சமாளிக்க ஆபிரிக்க ஒன்றியத்தின் தலைவரும், செனகலின் ஜனாதிபதியுமான மக்கி சல் ரஷ்யா, உக்ரேன் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் விஜயம் செய்யவிருக்கிறார். சில வாரங்களுக்கு முன்னர் ஜேர்மனியப் பிரதமர் ஒலொவ் ஷுல்ட்ஸ் செனகலுக்குச் சென்றபோது அவ்விஜயம் பற்றிய எண்ணத்தை மக்கி சல் வெளியிட்டிருந்தார்.

“இந்தப் போரில் நாம் எந்த ஒரு பகுதியாரின் பக்கமும் நிற்க விரும்பவில்லை. போர்களை நாம் ஆதரிக்கவில்லை, எனவே, ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை நாம் கண்டிக்கிறோம். ரஷ்யாவுக்குச் சென்று ஜனாதிபதி புத்தினைச் சந்தித்து நடந்துவரும் இந்தப் போரை நிறுத்தும்படி கேட்டுக்கொள்ளவிருக்கிறேன். அத்துடன், எமக்குத் தேவையான தானியங்களைக் கிடைக்கச்செய்ய, முடக்கப்பட்டிருக்கும் துறைமுகங்களைத் திறக்கும்படியும் கேட்டுக்கொள்ளவிருக்கிறேன்,” என்று மக்கி சல் குறிப்பிட்டிருக்கிறார்.

உக்ரேனிய ஜனாதிபதியும் ஆபிரிக்க நாட்டுத் தலைவர்களுடன் பேச விழைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். 

ஆபிரிக்காவின் பஞ்சத்தால் ஐரோப்பாவை நோக்கிப் புலம்பெயர்பவர்களுடைய எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடங்களில் அகதிகள் எண்ணிக்கை அதிகரிக்கலாகாது என்று எண்ணிச் செயற்படும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் உயர்மட்டப் பிரதிநிதிகளின் சந்திப்புகளில் இந்த நிலைமை பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *