ஐக்கிய ராச்சிய அரசால் தடுக்கப்பட்டிருக்கும் ஏழு ரஷ்ய பெரும் செல்வந்தர்களில் ரொமான் ஆப்ரமோவிச்சும் ஒருவர்.
உக்ரேன் ஆக்கிரமிப்புக்குக் காரணமான ரஷ்ய ஜனாதிபதிக்கும் அவரது நெருக்கமான வட்டத்தில் உள்ளவர்களுக்கும் மீது ஐக்கிய ராச்சிய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் செல்ஸி உதைபந்தாட்டக் குழு உரிமையாளரையும் தாக்கியது. தனது செல்ஸி உதைபந்தாட்டக் குழுவை விற்று உக்ரேன் அகதிகளுக்கு இலாபத்தைக் கொடுப்பதாகக் கூறியும் பலனில்லை. புத்தினுக்கு மிக நெருக்கமானவர்கள் வட்டத்திலிருக்கும் ரொமான் ஆப்ரமோவிச்சின் தொத்துக்களையும் பாவிக்க முடியாமல் ஐக்கிய ராச்சிய அரசு தடை போட்டிருக்கிறது.
ஐக்கிய ராச்சியம் தடை செய்திருக்கும் ஏழு ரஷ்ய பெரும் பணக்காரர்களின் மொத்தச் சொத்துக்களின் பெறுமதி 15 பில்லியன் பிரிட்டிஷ் பவுண்ட் பெறுமதியானதாகும் என்று கணிக்கப்படுகிறது. ரொஸ்னெப்ட் எரிபொருள் நிறுவன உயர் நிர்வாகி இகோர் செச்சின், பிரபல தொழிலதிபர் ஒலெக் டெரிபாஸ்கா, காஸ்புரோம் எரிசக்தி நிறுவன உயர் நிர்வாகி அலெக்ஸி மில்லர் ஆகியோரின் சொத்துக்களும் தடைசெய்யப்பட்டன. அவர்கள் ஐக்கிய ராச்சியத்தில் தமது நிறுவனங்கள் பெயரில் எந்தக் கொள்வனவும், விற்பனையும் செய்ய முடியாது. குறிப்பிட்ட ஏழு பேரின் மீதும் பயணத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
செல்ஸி உதைபந்தாட்டக்குழு பிரிமியர் லீக்கில் விளையாடுவதால் அதன் மோதல்கள் தடைசெய்யப்படமாட்டா. மார்ச் 10 திகதிக்கு முன்னர் அந்தக் குழுவின் மோதல்களுக்கு நுழைவுச்சீட்டு வாங்கியவர்கள் மட்டுமே அவற்றைக் காணப் போகலாம். அத்துடன் அக்குழுவின் மோதல்களைப் பார்க்க தவணைச்சீட்டு வாங்கியவர்களும் அவற்றைப் பாவிக்கலாம். மேற்கொண்டு செல்ஸி உதைபந்தாட்டக்குழுவினர் அனுமதிச்சீட்டுக்களை விற்கமுடியாது.
சாள்ஸ் ஜெ. போமன்