தன்மீது நிறவாதத் தாக்குதல் நடந்ததாக நாடகம் நடத்திய நடிகருக்கு 150 நாட்கள் சிறைத்தண்டனை.
2019 இல் தொலைக்காட்சித் தொடராக இருந்த Empire இல் கதாநாயகனாக நடித்துவந்த ஜுஸி சுமொலெட், தன் மீது நள்ளிரவில் இருவர் நிறவாதத் தாக்குதல் நடத்தியதாகப் பொலீசில் கொடுத்த புகார் பொய்யானது என்று நீதிமன்றம் வெளிப்படுத்தியது. காலாற நடக்கப் போன தன்னை முகமூடி அணிந்துவந்த இருவர் தாக்கியாகச் சொல்லியிருந்தார்.
“உன்னை நீயே இழைத்துக்கொண்ட தண்டனைக்கு ஈடாக என்னால் இன்று எதையுமே சிந்தித்துப் பார்க்க முடியவில்லை. பொய், புரட்டுக்கள் மூலம் உன் வாழ்வை நீயே தலைகீழாக மாற்றிக்கொண்டிருக்கிறாய்,” என்று தண்டனையை வெளியிட்ட நீதிபதி ஜேம்ஸ் லின் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
தன்னைத் தாக்கியவர்களை சுமொலெட் தான் வாடகைக்கு ஒழுங்குசெய்திருந்தார் என்றும் அவர்கள் நடிகருக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்பது அரச தரப்பால் நிரூபிக்கப்பட்ட பின்னரும், தான் சுற்றவாளியென்றே சாதித்து வருகிறார்.
மூன்று வருடங்களுக்கு முன்னர் நடந்த அந்த நிகழ்சியில், சுமொலெட் தன்னைத் தாக்கியவர்கள், “டிரம்ப்புக்கு ஆதரவான கோஷங்களை சொல்லித் தன் கழுத்தில் கழுத்தில் கயிறொன்றால் சுற்றி இறுக்கியதாகக் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் முகமூடியணிந்தவர்கள் தன் மீது ஏதோ இரசாயணக்குப்பியை வீசியதாகவும் அதை விசாரிக்க வந்த பொலீசாரிடம் விபரித்திருந்தார். ஜுஸி சுமொலெட் கறுப்பினத்தவரும், ஓரினச்சேர்க்கை ஈடுபாடுள்ளவருமாகும்.
சுமொலெட் பொய்யாகத் தன்னை நிறவாதம், வெறுப்புக் குற்றங்களால் பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டதன் மூலம் அந்தக் குற்றங்களால் உண்மையிலேயே பாதிக்கப்பட்டுவரும் பல்லாயிரக்கணக்கானவர்களின் அனுபவத்தையும், வேதனையையும் இழிவுபடுத்தியிருப்பதாகவும் நீதிபதி கண்டித்தார்.
150 நாட்கள் சிறைத்தண்டனை தவிர 145,000 டொலர்கள் அபராதமும், 30 மாதங்கள் கண்காணிப்பும் சுமொலெட்டுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. நிரூபிக்கப்பட்ட குற்றங்களுக்காக அவருக்கு மூன்று வருடங்கள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பிருந்தது.
சாள்ஸ் ஜெ. போமன்