எண்ணெய்க் கொள்வனவுக்காக சவூதியை நாடி விஜயம் செய்யவிருக்கும் ஜோன்சன் விமர்சனத்துக்கு உள்ளாகிறார்.
ரஷ்யாவிடமிருந்து எரிநெய் வாங்குவதை இவ்வருடக் கடைசியில் நிறுத்தி விடுவதாக முடிவெடுத்த ஐக்கிய ராச்சியத்தின் பிரதமர் அந்தத் தேவைக்காகச் சவூதியை நாடுவதற்காக அந்த நாட்டுக்கு விஜயம் செய்யவிருக்கிறார். தனது தூதுவராலயத்தில் பத்திரிகையாளர் கஷோஜ்ஜியைக் கொன்றது, 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியிருப்பது ஆகியவைகளால் மனித உரிமை மீறல்களுக்காகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டுவரும் சவூதி அரேபியாவுக்கு போரிஸ் ஜோன்சன் விஜயம் செய்வது பற்றி எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.
தனது விஜயத்தை விமர்சிப்பவர்களின் கருத்துக்களை ஒதுக்கிவிட்டு செவ்வாயன்று சவூதி அரேபியா செல்லவிருக்கும் ஜோன்சன் அங்கே பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மானைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்துவார். ரஷ்யாவிடம் கொள்வனவு செய்துவந்த எரிநெய்யை ஐக்கிய ராச்சியம் கொள்வனவு செய்வதானால் சவூதி அரேபியா தனது எண்ணெய் உறிஞ்சலை அதிகரிக்க வேண்டும். கடந்த சில வருடங்களாகச் சர்வதேச ரீதியில் வீழ்ந்திருந்த எரிநெய் விலையை உயர்த்தும் எண்ணத்துடன் அந்த இயற்கை வளத்தை உறிஞ்சுவதை ஒபெக் அமைப்பின் ஆதரவுடன் குறைத்திருக்கும் நாடு சவூதி அரேபியா. சமீப வாரங்களில் பல ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் கோரியும் கூட எரிநெய் உறிஞ்சலை அதிகரிக்க மறுத்து வருகிறது சவூதி அரேபியா.
“ரஷ்யாவின் தயாரிப்பில் பெரும்பகுதி எரிநெய்தான் என்பதை கவனித்துப் பார்க்கும்போது அதை அங்கிருந்து கொள்வனவு செய்வதை நிறுத்தினால் புத்தினின் வருமாத்தின் கழுத்தை நெருக்க முடியும். போருக்காகச் செலவழிக்கப்படும் தொகையை ஒடுக்கினால் தான் அவரை வழிக்குக் கொண்டுவர முடியும். எதிர்காலத்தில் நாம் எரிசக்திக்காக வேறு தொழில்நுட்பங்களை எம்மிடமே அபிவிருத்தி செய்துகொள்ளும்போது புத்தின் போன்றவர்களிடம் தங்கியிருக்கவேண்டிய அவசியமில்லை,” என்று ஜோன்சன் குறிப்பிட்டார்.
சவூதி அரேபியா அரசின் நிதி ஒன்றின் மூலம் ஐக்கிய ராச்சியத்தின் பிரிமியர் லீக் உதைபந்தாட்டக் குழுவான நியூகாஸில் கொள்வனவு செய்யப்பட்டது பற்றியும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. சவூதிய அரசுக்கும், புத்தினுக்கும் மனித உரிமைகளை அசட்டை செய்வதில் எவ்வித வித்தியாசமும் இல்லை என்று சில பாராளுமன்ற உறுப்பினர்கள் விமர்சிக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்