அனுமதியற்ற மெருகூட்டல் மருந்துகளைப் பாவித்ததால் அழகுப் போட்டியிலிருந்து விலக்கப்பட்ட ஒட்டகங்கள்.

இம்மாத ஆரம்பத்தில் சவூதி அரேபியாவில் ஆரம்பித்திருக்கும் அரசன் அப்துல் அஸீஸ் ஒட்டக விழாவின் அழகுப் போட்டியில் பங்குபற்ற 40 க்கும் அதிகமான ஒட்டகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. காரணம் அவைகளின் உரிமையாளர்கள் அவ்வொட்டகங்களுக்கு அனுமதியற்ற முறையில் அழகு மெருகூட்டல் செய்திருந்தமை ஆகும்.

உடலின் குறிப்பிட்ட அவயவங்களை ஊதி மெருகேற்றிக் காட்டுவதற்காக மனிதர்களும் பாவிக்கும் ஒரு மருந்து பூட்டெக்ஸ் [ Botox]ஆகும். இம்மாதம் முழுக்க நடக்கவிருக்கும், சுமார் 66 மில்லியன் டொலர் பெறுமதியான பரிசுகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய அந்தப் பந்தயத்தில் வெல்வதற்காகப் பல ஒட்டக உரிமையாளர்கள் அவைகளுக்கு பூட்டெக்ஸ் ஊசிகள் கொடுத்திருப்பது தெரியவந்தமையே குறிப்பிட்ட ஒட்டகங்களைப் பந்தயங்களில் பங்கெடுக்க அனுமதியாமைக்குக் காரணமாகும்.

தமது பந்தய ஒட்டகங்களுக்கு மிருகங்களுக்குக் கொடுக்கக்கூடாத இரசாயண மருந்துகளைக் கொடுத்ததுக்காக அவைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் சவூதி அரேபிய அரசு அறிவித்திருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்