பிரெஞ்ச் ஊடகங்களிரண்டை மூடும்படி மாலி உத்தரவிட்டது.
மாலி இராணுவம் வன்முறைகளில் ஈடுபடுவது போன்ற பொய்ச்செய்திகளைப் பரப்புவதாகக் குற்றஞ்சாட்டி FRANCE 24 தொலைக்காட்சி, RFI radio வானொலி ஆகிய ஊடகங்களை மாலியில் தடைசெய்தது அந்த நாட்டின் இராணுவ அரசு.
“மாலியின் இராணுவம் பொது மக்கள் மீது வன்முறைகளில் ஈடுபட்டுக் குற்றங்கள் செய்வதாக வெளியிடப்பட்ட பொய்ச் செய்திகளை அரசு திட்டவட்டமாக மறுக்கிறது. அக்குற்றச்சாட்டுக்களை விசாரித்த பின்னர் அப்பொய்களைப் பரப்பும் ஊடகங்களை உடனடியாக அரசு நாட்டில் தடை செய்கிறது,” என்கிறது அரசின் அறிக்கை.
அவ்விரண்டு பிரெஞ்ச் ஊடகங்களின் தலைமை அலுவலகம் அரசின் குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது. பத்திரிகைச் சுதந்திரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மாலியின் இராணுவம் குறிப்பிட்ட முடிவை எடுத்திருப்பதாக பிரான்ஸ் அரசு தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது.
ஆகஸ்ட் 2020 முதல் அடுத்தடுத்து இரண்டு இராணுவ அரச கவிழ்ப்புக்களைச் செய்திருக்கிறது மாலியின் தற்போதைய இராணுவக் குழு. பல மனித உரிமைக் குழுக்களும் அந்த இராணுவத்தினர் நாட்டில் செய்துவரும் குற்றங்களை ஆவணப்படுத்திக் கண்டித்திருக்கிறார்கள்.
மாலியில் பரவியிருக்கும் இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்களைக் கட்டுப்படுத்த அங்கு பல வருடங்களாகவே பிரெஞ்சு இராணுவம் அரசுக்கு உதவி வந்தது. பதவியைக் கைப்பற்றிய இராணுவத்தின் ஒரு குழுவினர் பிரான்ஸின் இராணுவத்தை நாட்டை விட்டு வெளியேறும்படி இவ்வருட ஆரம்பத்தில் உத்தரவிட்டிருக்கிறார்கள். அவர்கள் பதிலாக, ரஷ்யாவின் தனியார் இராணுவமான வாங்னர் மாலியின் இராணுவத்துக்கு உதவி வருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்