எதிர்பார்ப்பை மீறி உக்ரேனுக்கு எதிராக மிகக்குறைவான அளவிலேயே இணையத்தளத்தாக்குதல்கள் நடந்திருக்கின்றன.
உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுக்குமானால் அப்போரில் உக்ரேன் இணையத்தளங்களின் மீதான தாக்குதல்கள் பெருமளவில் நடைபெறும் என்று சர்வதேச அரசியல் அவதானிகள் பலரும் ஆரூடம் கூறிவந்தனர். அப்படியான தாக்குதல்கள் உக்ரேனுக்குள் ரஷ்யா புக முன்னரான வாரங்களில் பல தடவைகள் நடந்துவந்ததே அதற்கான காரணங்களிலொன்றாக இருந்தது. ஆனால், அக்கணிப்புக்கள் பொய்யாகியிருக்கின்றன. மிகவும் குறைவான அளவிலேயே ரஷ்யா இணையத்தளப் போரை நடத்தி வருகிறது.
ரஷ்யா தனது போர்த்திட்டங்களின்படி சில மணி நேரங்களில் முதல் ஓரிரண்டு நாட்களுக்குள் உக்ரேன் சரணடைந்துவிடும் என்று எதிர்பார்த்தது. வேகமான, இராணுவ அதிரடித் தாக்குதல் மூலம் உக்ரேன் மக்களின் போர் எதிர்ப்பை அடக்கிவிடலாம் என்று திட்டமிட்டது போல நடக்கவில்லை. உக்ரேனுள் நுழைந்த ரஷ்ய இராணுவம் பலமான எதிர்ப்பையும், இழப்பையும் நேரிட்டது மட்டுமன்றி வெவ்வேறு காரணங்களால் திட்டமிட்டபடி முன் நோக்கி நகரமுடியாமல் ஆங்காங்கே மாட்டிக்கொண்டிருந்ததும் தெரியவந்திருக்கிறது.
உக்ரேன் தனது நாட்டின் போர்த்திட்டங்களின்படி நாட்டின் இணையத்தளங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம். ரஷ்ய இராணுவத்தின் வேகமான நகர்வைத் தடுக்க நாட்டின் போக்குவரத்திலும் சேதங்களை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. அத்துடன் நாட்டின் மின்சாரத் தொடர்பையும் ரஷ்யாவின் இணைப்பிலிருந்து வெட்டிக்கொண்டிருக்கிறது. அதனால், ரஷ்யாவின் போரின்போது இணையத்தளத் தாக்குதல்களின் பங்கு மிகக் குறைவாகவே தெரிகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்