“எமக்கு மேல் மக்களுக்கு நம்பிக்கை வரவேண்டுமானால் நாம் போரை நிறுத்தவேண்டும்,” என்றார் யோக்கோ விடூடு.

இந்தோனேசியாவின் பாலியில் நடந்துவரும் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பேசப்படும் பெரும்பாலான விடயங்களில் நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ உக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் பங்குகொள்கிறது. அதில் பங்குபற்றும் உலகத் தலைவர்களையும், பிரதிநிதிகளையும் வரவேற்று உரையாற்றிய இந்தோனேசியத் தலைவர் யோக்கோ விடூடு ரஷ்யா – உக்ரேன் போருக்கு ஒரு தீர்வு காண்பது அவசியம் என்பதை வலியுறுத்தினார்.   

“எங்கள் மீதும் எங்களது நடவடிக்கைகள் மீதும் உலக மக்கள் நம்பிக்கை வைக்கவேண்டுமானால் நாம் போர் புரிவதை நிறுத்திவிட்டுச் சமாதானத்தின் வழியைத் தேடுவது அவசியம்.அதன் மூலம் மட்டுமே நாங்கள் முன்னோக்கி நகர முடியும்.  எங்களுக்கு எமது  நாட்டு மக்கள் மீது மட்டுமன்றி உலகின் சகல மக்கள் மீதும் பொறுப்புணர்வு இருக்கவேண்டும். உலக மக்களின் கண்கள் எங்கள் மீது இருக்கின்றன. நாங்கள் வெற்றியடையப் போகிறோமா அல்லது மேலும் தோல்விகளையே உருவாக்கப் போகிறோமா?  என்னைப் பொறுத்தவரை ஜி 20 வெற்றிபெறவேண்டும், தோல்வியைத் தழுவலாகாது,” என்று எல்லோரையும் அவர் வேண்டிக்கொண்டார். 

“மக்களுக்குக் கிடைக்கவேண்டிய உணவுப் பொருட்களைத் தடை செய்வதன் மூலம் போர் நடத்தக்கூடாது,” என்று குறிப்பிட்டு ரஷ்யா உணவு ஏற்றுமதியை அரசியலாக்குவதை மறைமுகமாக இடித்துக் காட்டினார் சீன அதிபர். 

இந்தியப் பிரதமர் தனது உரையின்போது, “நான் ஏற்கனவே சொல்லியிருப்பதையே மீண்டும் குறிப்பிடுகிறேன். போர் நிறுத்தம் ஒன்றை உண்டாக்கிவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்த ஆரம்பிக்கவேண்டும். கடந்த நூற்றாண்டில் நடந்த போர்களின்போது அன்றைய உலகத் தலைவர்கள் சிந்தித்துப் போரை நிறுத்திச் சமாதானத்தை ஏற்படுத்தினார்கள். இப்போது எங்கள் முறை, நாம் சமாதானத்தை உண்டாக்குவது அவசியம்,” என்றார்,  

உக்ரேனிலிருந்து தொலைத்தொடர்பு மூலம் ரஷ்யாவை ஒதுக்கிவிட்டு ஜி 19 நாட்டுத் தலைவர்கள் என்று விளித்துத் தனது உரையை நிகழ்த்தினார் ஜனாதிபதி செலென்ஸ்கி. அச்சமயத்தில் ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் மண்டபத்தில் தனது இருக்கையில் இருந்தார். தமது நாட்டுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும்படி கேட்டுக்கொண்டார் செலென்ஸ்கி. தனது உரையின்போது ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் லவ்ரோவ் உக்ரேன் மீதான போருக்குக் காரணம் தாம், “நவீன நாஸிகளை ஒழித்துக் கட்டவேண்டியிருப்பதே,” என்று குறிப்பிட்டார்.

முன்னர் நடந்த பல சர்வதேச மாநாடுகளின்போது உக்ரேனுக்கு ஆதரவான நாட்டுத் தலைவர்கள் ரஷ்யப் பிரதிநிதி உரை நிகழ்த்தும்போது மண்டபத்திலிருந்து அகன்றது போல இந்த முறை செய்யவில்லை. ஆனால், மண்டபமெங்கும் சஞ்சலமான அமைதி நிலவியதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *