இந்திய இராணுவத்துக்கு ஆட்கள் சேர்க்கும் “அக்னிபாத்” திட்டத்துக்கு எதிராகக் கலவரங்கள்.

இந்திய அரசினால் சமீபத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்ட இராணுவ சேவைத் திட்டமான, “அக்னிபாத்” மீதிருக்கும் அதிருப்தி நாட்டின் பீகார், உத்தர் பிரதேஷ் மாநிலங்களில் கலவரங்களாக வெடித்திருக்கிறது. அச்சேவையில் முதல் நாலு வருடங்கள் இருந்தபின் 75 விகிதமானோர் வெளியேறுவார்கள். அவர்களுக்கு மற்றைய அரச சேவைகளில் 20 – 30 % இடங்களை ஒதுக்கவேண்டும் என்று கோருகிறார்கள் போராட்டக்காரர்கள்.

இந்தியாவின் 17.5 – வயது எல்லைக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கக்கூடியதாக நாட்டின் புதிய இராணுவ சேவைத் திட்டம் அக்னிபாத் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தின்படி இராணுவத்தில் சேர்பவர்களுக்கான முதலாவது பரீட்சைகள் இவ்வருட மூன்றாம் பகுதியில் ஆரம்பிக்கப்படவிருக்கிறது. அக்னிபாத் திட்டம் மூலம் நாட்டின் இராணுவ சேவைக்கு இளமையானவர்களைச் சேர்க்க முடியுமென்றும் போர்க்காலத்தில் அவர்கள் முன்னணியில் நின்று நாட்டைப் பாதுகாக்க முடியும் என்றும் குறிப்பிடும் பாதுகாப்பு அமைச்சு அத்திட்டம் குடிமக்கள் தமது நாட்டுக்காகப் பாதுகாப்பு சேவையில் சேரக் கவர்ச்சியான ஒரு பாதை என்றும் குறிப்பிடுகிறார்கள். 

அக்னிபாத் சேவையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 25 விகிதமானோர் முதல் நாலு வருடக் கட்டாயப் பணிக்காலம் முடிந்தபின்னர் இராணுவத்தினருக்கான தகுதிகளின் அடிப்படையில் மேலும் 15 வருடங்கள் பணியாற்றுவார்கள். இத்திட்டம் மூலம் இந்தியாவின் முப்படைகளுக்கும் 46,000 பேர் நாடு முழுவதிலிருந்தும் சேர்த்துக் கொள்ளப்படவிருக்கிறார்கள்.  

அக்னிபாத் திட்டத்துக்கெதிராகப் பீகார் மாநிலத்தில் மூன்றாவது நாளாகக் கலவரங்கள் தொடர்கின்றன. அது வெள்ளியன்று உத்தர் பிரதேசத்தின் பகுதிகளிலும் வெள்ளியன்று ஆரம்பமாகியிருக்கிறது. கலவரங்களில் ஈடுபட்டிருப்போர் ரயில் நிலையங்களை முற்றுகையிட்டுத் தாக்குவதால் பீகாரில் பல ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. ரயில் நிலையங்களைத் தாக்கிச் சூறையாடிக் கலவரக்காரர்கள் ரயில் பெட்டிகளுக்குத் தீவைத்து வருகிறார்கள். வன்முறையான கலவரங்களை அடக்க இராணுவமும், பொலீசாரும் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *