“கொவிட் 19 இன் சவாலை உலகத்தின் மருந்தகம் எதிர்கொள்கிறது.” இந்திய வெளிவிவகார அமைச்சர்

வெள்ளை மாளிகையில் ஆட்சி மாறும் அதே நாளில் இந்தியாவின் செரும் இன்ஸ்டிடியூட்டில் தயாரிக்கப்பட்ட கொவிட் 19 தடுப்பு மருந்துப் பொட்டலங்கள் அதன் பக்கத்து நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. இந்திய அரசு இரண்டு தடுப்பு மருந்துகளைத் அவசரகாலப் பாவிப்புக்காக அனுமதித்திருந்தாலும் முதல் கட்டத்தில் அஸ்ரா ஸெனகா நிறுவனத்தின் கொவிஷீல்ட் தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பங்களாதேஷ், மியான்மார், ஷிஷேல்ஸ், சிறீலங்கா, நேபாளம், ஆப்கானிஸ்தான், மொறிஷ்யஸ் ஆகிய நாடுகளுக்கும் இந்தியா கொவிஷீல்ட்டை அனுப்பவிருக்கிறது. புட்டான், மாலைதீவுகள் புதனன்றே மருந்துகளைப் பெற்றுவிட்டன. வியாழனன்று மருந்துகள் பங்களாதேஷை அடையும். 

நேபாளம் இந்தியாவிடமிருந்து ஒரு மில்லியன் தடுப்பு மருந்துகளை இலவசமாகவும், பங்களாதேஷ் இரண்டு லட்சம் மருந்துகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ளும். மேற்கொண்டு தேவைக்கான மருந்துகளை அவை விலைக்கு வாங்கிக்கொள்ளும். 

இந்தியாவின் பக்கத்து நாடுகளில் பாகிஸ்தான் மட்டுமே இந்தியாவிலிருந்து மருந்தை வாங்கவில்லை. அங்கே அஸ்ரா ஸெனக்காவின் தடுப்பு மருந்தும், சீனாவின் தடுப்பு மருந்தும் அவசரகாலப் பாவிப்புக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. முதலாவதாகச் சீனாவின் சினோபார்ம் தடுப்பு மருந்தையே அந்த நாடு பாவிக்கவிருக்கிறது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டது போலவே உலகின் பெரும்பகுதி மக்களை, முக்கியமாக வறிய, மற்றும் வளரும் நாட்டு மக்களைக் கொவிட் 19 க்கு எதிர்சக்தியை உருவாக்கிக்கொள்ள உதவுவதில் இந்தியாவின் பங்கே பெரியதாக இருக்கும். Pfizers/Biontech, மொடர்னா ஆகிய நிறுவனங்களின் மருந்துகளைத் தயாரிப்பதில் ஈடுபடாமலேயே இந்தியா உலகின் 60 விகிதமான தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கும் நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

“உலகில் தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கும் நாடுகள் பல இருக்கின்றன. ஆனால், உலக மக்களுக்கான மருந்துகளில் பெரும்பங்கை அவர்களால் வாங்கிக்கொள்ளக்கூடிய விலையில் தயாரிக்கக்கூடிய வசதி இந்தியாவிடம் மட்டுமே இருக்கிறது,” என்கிறார் ஆஸ்ரேலியாவின் இந்தியத் தூதுவர் பரி ஓ’பரல். கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கொவிட் 19 தடுப்பு மருந்துகளில் எட்டு மருந்துகளை இந்திய நிறுவனங்கள் தயாரிக்கவிருக்கின்றன. 

இந்தியாவுக்குள் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொவக்ஸீன் தற்போது ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படவில்லை. அதன் கடைசியான பரீட்சைகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதே நேரம் அவைகளை 10 தென்னமெரிக்க, தூர ஆசிய கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு விற்பது பற்றிய பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

ரஷ்யா தனது ஸ்புட்னிக் V ஐத் தயாரிப்பதில் முக்கி முனகுகிறது. அவர்களுக்காக முதல் கட்டத்தில் இந்தியாவின் ஷொட் கைஸா நிறுவனம் 100 மில்லியன் தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கும் ஒப்பந்தம் செய்திருக்கிறது. 

தடுப்பு மருந்துத் தயாரிப்புக்களால் இந்தியாவின் மருந்துப் பாதுகாப்பு, பொட்டலம் செய்து, ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களும் பெரும் பலனடையவிருக்கின்றன. சர்வதேச நிறுவனங்களான பெட் எக்ஸ், டி.எச். எல் ஆகிய நிறுவனங்கள் தவிர இந்தியாவின் உள் நாட்டு நிறுவனங்களும் அவ்விடயத்தில் தமது முதலீடுகளை 50 விகிதங்களுக்கு மேலாக அதிகரிப்பதில் இறங்கியிருக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *