டிராகன் பழத்தின் பெயரை மாற்றியது குஜராத் மாநிலம்.

இந்தியாவின் அபிமான எதிரியான சீனா அடிக்கடி எல்லையில் மோடிக்கொண்டே இருக்கிறது என்ற கோபத்தில் பல சீனப் பொருட்களை, சீனாவின் தொழில்நுட்பக் கருவிகளை இந்தியா ஒதுக்கிவைத்து வருகிறது. அந்த வரிசையில் சீனாவின் சின்னத்தை ஞாபகப்படுத்தும் டிராகன் பழத்தின் பெயரைக் கமலம் என்று மற்றியிருக்கிறது குஜராத் அரசு.

“டிராகன் பழம் என்பது பொருத்தமானதல்ல, அது சீனாவுடன் தொடர்புடையது. அப்பழம் தாமரை உருவத்தை ஞாபகப்படுத்துகிறது. சமஸ்கிருதத்தில் அதற்கான சொல் கமல் எனவே குஜராத் அரசு அப்பெயரைத் தெரிந்தெடுத்தது. இதிலொன்றும் அரசியல் இல்லை,” என்று குஜராத் மாநில முதலமைச்சர் தெரிவித்தார்.

“சில மாதங்களுக்கு முன்னர் குஜராத்  குட்ச் பிராந்தியத்தில் டிராகன் பழங்களை வெற்றிகரமாகப் பயிரிட்டுவரும் விவசாயிகளை மோடி பாராட்டியிருந்தார். அதைத் தொடர்ந்து அந்த விவசாயிகளிடமிருந்து அதன் பெயரை மாற்றுவது பற்றிக் கோரிக்கை எழுந்தது. எனவே தான் அரசிடம் அதைப் பற்றிக் குறிப்பிட்டேன். அரசு ஆராய்ந்து இந்த முடிவை எடுத்தது,” என்று குறிப்பிடுகிறார் வினோத் சாவ்டா, குட்ச் பகுதியின் பாராளுமன்ற உறுப்பினர்.

குட்ச் பகுதியில் சுமார் 200 விவசாயிகள் சுமார் 1,500 ஹெக்டேர் நிலத்தில் டிராகன் பழங்களைப் பயிரிடுகிறார்கள். அதைத் தவிர மஹாராஷ்ரா உட்பட வடகிழக்கு மாநிலங்களில் அப்பழங்கள் பயிரிடப்படுகின்றன. அங்கெல்லாம் பெயர் மாற்றம் பற்றி எந்த ஆலோசனையும் இல்லையென்று தெரிகிறது.

“உருப்படியாக எதையும் செய்வதற்குத் துப்பில்லாத குஜராத் அரசு இதுபோன்ற கண் துடைப்புக்களில் இறங்கியிருக்கிறது,” என்கிறது எதிர்க்கட்சியான காங்கிரஸ். பல சமூகவலைத்தளங்களிலும் இதுபற்றி எள்ளி நகையாடுகிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *