சில நாடுகளுடன் பரஸ்பர ஒப்பந்தங்கள் செய்துகொண்டு இந்தியா சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் நாட்டைத் திறந்தது.

இன்று 15 ம் திகதி திங்களன்று முதல் இந்தியா தான் பரஸ்பரம் உடன்படிக்கை செய்துகொண்ட நாடுகளின் குடிமக்களுக்குச் சுற்றுலா செய்வதற்காக நாட்டைத் திறந்திருக்கிறது. அதற்கான விசாக்கள் குறிப்பிட்ட நாட்டினருக்கு ஒரு மாதத்துக்கு முதலே வினியோகம் செய்யப்பட ஆரம்பித்தன.

சீனா, பிரிட்டன் போன்ற நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தியாவின் கதவுகள் தொடர்ந்தும் மூடியிருக்கின்றன. அத்துடன் விமானப் பயணச்சீட்டுக்களின் விலை மிகவும் அதிகமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்த்த அளவுக்கு வருவதாக இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. கொவிட் 19 பரவுவதற்கு முன்னர் சுற்றுலாவுக்கு வந்தவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது வெறும் 5 % சுற்றுலாப் பயணிகளே வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய ராச்சியம், தென்னாபிரிக்கா, சீனா, பிரேசில் நாட்டவர்கள் இந்தியாவுக்குள் வந்தவுடன் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். பரஸ்பரம் ஒப்பந்தம் செய்துகொண்ட நாட்டவர்களின் குடிமக்கள் இந்தியாவுக்கு வந்த இரண்டு வாரங்களுக்குப் பின் தம்மைப் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டால் போதுமானது.

சாள்ஸ் ஜெ. போமன்