நாள் முழுவதும் உக்ரேன் மீது ஏவுகணைக் குண்டுகள், மாலையில் போலந்துக்குள் ரஷ்யக் குண்டால் இருவர் மரணம்.

ஜி 20 மாநாட்டில் முக்கிய தலைவர்கள் ரஷ்யாவின் போரை நிறுத்தும்படி குரல் கொடுத்ததற்குப் பதிலாகவோ என்னவோ செவ்வாயன்று முழுவதும் சுமார் 100 ஏவுகணைக் குண்டுகள் உக்ரேன் மீது செலுத்தப்பட்டன. மாலையில் ரஷ்யக் குண்டொன்று போலந்துக்குள் விழுந்து இருவர் மரணமடைந்தனர். அது தம்மால் ஏவப்பட்ட குண்டல்ல என்று ரஷ்யா உடனடியாக மறுத்தாலும் போலந்திலிருந்து அது ரஷ்யாவின் குண்டே என்று உத்தியோகபூர்வமாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

போலந்துக்குள் விழுந்த அந்தக் குண்டால் சர்வதேசமெங்கும் சஞ்சலம் அதிகரித்திருக்கிறது. நாட்டோ அங்கத்துவ நாடான போலந்து மீது தாக்குதல் நடப்பின் அதற்கு ஆதரவாகச் சகல அங்கத்தவர்களும் உதவ வேண்டும் என்பது அந்தக் கூட்டமைப்பின் விதியாகும். குறி தவறி அது போலந்துக்குள் விழுந்ததால் அல்லது ரஷ்யா வேண்டுமென்றே ஆழம் பார்க்கிறதா என்ற கேள்விக்குறி போலந்தின் ஊடகங்களில் எழுப்பப்பட்டிருக்கிறது. போலந்தின் அரசு உடனடியாகக் கூடி நாட்டின் இராணுவப் பாதுகாப்பின் தயார்நிலையைக் கூராக்கியிருக்கிறது.

 “தனது ஆக்கிரமிப்புக்களுக்குத் தண்டனையில்லாமல் தப்பிவிடலாம் என்ற நிலை உள்ளவரை ரஷ்யா இதேபோன்ற அத்துமீறல்களை ரஷ்யா செய்துகொண்டேயிருக்கும்,” என்று உக்ரேன் தலைவர் காட்டமாகக் குறிப்பிட்டார்.

ஜி 20 மாநாட்டில் பங்குபற்றிக்கொண்டிருக்கும் ஜனாதிபதி ஜோ பைடன் “ரஷ்யாவால் அந்தக் குண்டு செலுத்தப்பட்டிருக்கும் என்று நம்பமுடியாமலிருக்கிறது,” என்று குறிப்பிட்டார். அவரது கூற்றுக்குக் காரணம் குறிப்பிட்ட ஏவுகணைக் குண்டின் பாதையைப் பற்றிய அரர் அறிந்த விபரங்களை வைத்துக் குறிப்பிடப்பட்டதாகும்.

போலந்துக்குள் குண்டு விழுந்ததைப் பற்றி அறிந்திருப்பதாகவும் அதுபற்றி மேலும் தெரிந்துகொள்ளப் போலந்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதாக அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சும், நாட்டோ அமைப்பின் தலைமையும் தெரிவித்திருக்கின்றன. 

புதனன்று அதிகாலையில் வெளியாகிவரும் அமெரிக்கச் செய்திகள் போலந்தில் விழுந்த ஏவுகணைக் குண்டு ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது என்று அது உக்ரேன் தன்னை நோக்கி வீசப்பட்ட ரஷ்யக் குண்டை எதிர்கொள்ள ஏவப்பட்ட குண்டு என்று தெரிவிக்கின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *