திறந்த சிறுமிகள் பாடசாலையை உடனடியாக மூடிய தலிபான்களுடன் பேச்சுவார்த்தைகளை முறித்துக்கொண்டது அமெரிக்கா.

மார்ச் 23 ம் திகதி புதன்கிழமையன்று பல்லாயிரக்கணக்கான பாடசாலைச் சிறுமிகள் ஆப்கானிஸ்தானில் தமது பாடசாலைக்குள் சந்தோசத்துடன் நுழைந்தனர். அவர்களுடைய வகுப்புக்கள் ஆரம்பித்த சமயத்தில் நாட்டை ஆளும் தலிபான்களின் அரசு தனது மனதை மாற்றிக்கொண்டு பாடசாலைகள வரையறையின்றி மூடிவிடுவதாக அறிவித்தது. இஸ்லாமியச் சட்டங்கள், ஆப்கானியக் கலாச்சாரங்களுக்கு ஒவ்வான கல்வி முறை பற்றிக் கல்வி அமைச்சு தீர்மானித்த பின்னர் மீண்டும் பாடசாலைகளைச் சிறுமிகளுக்காகத் திறப்பது பற்றி அறிவிக்கப்படும் என்று தலிபான்கள் அரசு குறிப்பிட்டிருந்தது.

சர்வதேச சமூகம் ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசைத் தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ளாத நிலையே நிலவி வருகிறது. சமீபத்தில் உலக வங்கி, ஐ.நா ஆகிய அமைப்புக்கள் ஆப்கானிஸ்தான் மக்களுக்கான நிவாரண உதவிகளுக்கு உதவும் முடிவுகளை எடுத்திருப்பினும் எவரும் நேரடியாக அவ்வுதவிகளைத் தலிபான்களின் அரசிடம் வழங்கத் தயாராக இல்லை. ஆனால், உத்தியோகபூர்வமில்லாத தொடர்புகள் தலிபான்களின் பிரதிநிதிகளுடன் ஆங்காங்கே நடந்து வருகின்றன.

திறக்கப்பட்ட பெண்களின் பாடசாலைகள் மூடப்படுவதற்குக் காரணமாக ஆசிரியர்கள் தட்டுப்பாடு சுட்டிக் காட்டப்படுகிறது. பெண்களுக்கான பாடசாலைகளில் பெண்கள் மட்டுமே பணிகளில் அமர்த்தப்பட்டிருக்கவேண்டும் என்று தலிபான்கள் திட்டவட்டமாக இருக்கிறார்கள். ஆனால், அத்தேவையைப் பூர்த்திச்செய்யுமளவுக்குப் பெண் ஆசிரியர்கள் அந்த நாட்டில் இல்லை.

சனிக்கிழமையன்று பாடசாலைச் சிறுமிகள் தங்கள் புத்தகங்களுடன் காபுல் சதுக்கத்தில் கூடி, “கல்வி எங்கள் அடிப்படை உரிமை, பாடசாலைகளைத் திறவுங்கள்,” என்று கூவுகிறார்கள். ஏழு மாதங்களுக்கும் அதிகமாக அச்சிறுமிகளின் கல்வி முடக்கப்பட்டிருக்கிறது. தலிபான்களிடம் கல்வியூட்டலுக்கான பணம் போதுமான அளவில் இல்லையென்பதால் பாடசாலை ஆசிரியர்களுக்கான ஊதியங்களைக் கொடுக்க வெளிநாடுகள் சில ஒன்றுசேர்ந்து திட்டமொன்றை வகுத்திருந்தன.

கத்தாரில் தலிபான்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டிருந்த அமெரிக்கா சிறுமிகளுக்கான பாடசாலைகள் மூடப்பட்டதையடுத்து அப்பேச்சுவார்த்தைகளிலிருந்து பின்வாங்கியது. பாடசாலைகளை மூடப்படுதல் தலிபான்கள் மீண்டும் பழைய கோட்பாடுகளுக்குத் திரும்புவதையே காட்டுகிறது என்று கருதும் அமெரிக்கா, இது தங்கள் ஆப்கானிஸ்தான் தொடர்புகளில் புதிய அத்தியாயத்தைத் திறந்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *