படுவேகமாக ஏறிவரும் எரிபொருட்களின் விலைகளைத் தாங்க மக்களுக்கு உதவவிருக்கிறது கலிபோர்னியா மாநிலம்.
சர்வதேசச் சந்தையில் உயர்ந்துவரும் எரிபொருட்களின் விலையால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுவதை மென்மைப்படுத்த என்ன செய்யலாம் என்று அமெரிக்காவின் மாநிலங்களிலும் வாதப் பிரதிவாதங்கள் நடந்துவருகின்றன. அமெரிக்காவிலேயே எரிபொருள் விலை அதிகமான கலிபோர்னியாவின் ஆளுனர் வாகன உரிமையாளர்களுக்கு 800 டொலர்கள் வரை உதவித்தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.
கலிபோர்னியாவின் வாகன உரிமையாளர்களுக்கு உதவித்தொகை கிடைப்பதுடன், வரிவிலக்கு, இலவச பொதுப்போக்குவரத்து போன்ற உதவித் திட்டங்களையும் ஆளுனர் கவின் நியூசம் வெளிப்படுத்தினார். கடந்த வாரம் ஜோர்ஜியா, மெரிலாண்ட் ஆகியவை தற்காலிகமாக எரிபொருட்களுக்கான வரியை நீக்கின. ஜோர்ஜியா வருமானவரிகளையும் குறைப்பதாக அறிவித்தது.
அமெரிக்காவிலேயே இரண்டாவது உயர்ந்த எரிபொருள் வரியைக் கொண்ட கலிபோர்னியாவில் அவ்வரிகளைக் குறைப்பதற்கு அரசியல்வாதிகளிடையே ஒத்த கருத்து இல்லை. அதைக் குறைக்கும் பட்சத்தில் எரிபொருள் நிறுவனங்கள் மேலும் விலையை உயர்த்தி அவ்வரிக்கிணையான தொகையைத் தாமே எடுத்துக்கொள்ளலாம் என்ற சந்தேகம் இருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்