உக்ரேனுக்கு மனிதாபிமானத் தேவைகள் அதிகரித்திருப்பதாக ஐ.நா-வின் பாதுகாப்புச் சபையில் ரஷ்யா கொண்டுவந்த பிரேரணை முறியடிக்கப்பட்டது.

“பல மில்லியன் உக்ரேன் மக்கள் உணவு, நீர், உறைவிடம் போன்ற அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறார்கள்,” என்று ஐ.நா-வின் பாதுகாப்புச் சபையில் ரஷ்யா முன்வைத்த பிரேரணை இரண்டே இரண்டு வாக்குகளைப் பெற்றுத் தோற்கடிக்கப்பட்டது. ரஷ்யாவுக்கு ஆதரவாகச் சீனா மட்டுமே வாக்களித்தது. சபையின் மற்றைய 13 அங்கத்தவர்களும் எதிராகவே வாக்களித்தார்கள்.

உக்ரேனில் ஏற்பட்டிருக்கும் மனிதாபிமான உதவித் தேவைகளுக்கான காரணம் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போர் என்பதைக் குறிப்பிடாமல் தவிர்த்த அந்தப் பிரேரணை ஒரு கண்துடைப்புத் திட்டமே என்று அமெரிக்கா உட்பட்ட பல நாட்டின் அங்கத்துவர்கள் விமர்சித்தார்கள்.

“அமெரிக்கா குறிப்பிடுவது போல அப்படியான ஒரு பிரேரணையை முன்வைக்க ரஷ்யாவுக்கு அருகதை இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது,” என்று வாக்கெடுப்புக்கு முன்னர் ரஷ்யாவின் பிரதிநிதி குறிப்பிட்டார்.

“உக்ரேனில் உண்டாகியிருக்கும் மோசமான நிலபரத்தை பாதுகாப்புச் சபை அங்கத்துவர்கள் தமது அரசியல் வேறுபாடுகளைக் களைந்துவிட்டுக் கவனிக்கவேண்டும். மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகிறது என்ற நிஜத்தைக் கவனித்து உதவ நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்பதற்காகவே சீனா ஆதரவாக வாக்களித்தது என்று சீனாவின் பிரதிநிதி குறிப்பிட்டார். ஓரிரு நாட்களுக்கு முன்னர் சீனா தனது உக்ரேன் மனிதாபிமான உதவியாகச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலமாக 1.54 மில்லியன் டொலர் பெறுமதியான உதவிகளைச் செய்வதாக அறிவித்திருந்தது.

உக்ரேன் குடிமக்களில் நாலில் ஒரு பகுதியினர் – சுமார் 10 மில்லியன் பேர் – தாம் வாழ்ந்த இடங்களிலிருந்து நாட்டுக்குள்ளேயோ, வெளிநாட்டுக்கோ புலம்பெயர்ந்து தஞ்சம் கோரியிருப்பதாக ஐ.நா-வின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் 12 மில்லியன் பேருக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகவும் 5.6 மில்லியன் பாலர்கள் தமது கல்வியை இழந்திருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *