இஸ்ராயேலில் இருவரைச் சுட்டுக் கொன்றதாக காலிபாத் தீவிரவாதிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இஸ்ராயேலின் ஹதேரா நகரில் ஞாயிறன்று நடந்த தீவிரவாதத் தாக்குதலொன்றில் இருவர் இறந்தனர். மேலும் சுமார் 10 பேர் காயமடைந்திருப்பதாக மருத்துவமனைச் செய்திகள் குறிப்பிடுகின்றன. அதைத் தாமே செய்ததாக ஐ.எஸ் என்று அழைக்கப்படும் இஸ்லாமியக் காலிபாத் அமைக்கப் போரிடும் தீவிரவாதக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். துப்பாக்கிகளால் சுட்டவர்கள் அதற்கு முன்னர் தமது உறுதிமொழியை வெளியிட்ட வீடியோ படங்களையும் வெளியிட்டிருக்கிறார்கள் அக்குழுவினர்.
18 வயதான இருவர் தம்மைச் சுற்றியிருந்தவர்களைச் சுட்டுத்தள்ளிய அந்தச் சம்பவத்தின்போது காயமடைந்த நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை தெரிவிக்கிறது. தாக்குதலில் ஈடுபட்ட இருவரும் அந்த இடத்திலேயே இஸ்ராயேல் பொலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இஸ்ராயேல் அராபியர்களான அவர்களிலொருவன் பிரெஞ்ச்-இஸ்ராயேல் குடிமகனாகும். சுடப்பட்டு இறந்தவர்கள் இருவரும் பொலீசாராகும்.
கொலையாளிகளுக்கு உதவியாக இருந்தவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து பேரை இஸ்ராயேல் கைது செய்திருக்கிறது.
காஸா பகுதியில் ஆட்சியிலிருக்கும் ஹமாஸ் இயக்கத்தினரும், இஸ்லாமிய ஜிகாத் எனப்படும் பாலஸ்தீன இயக்கத்தினரும் நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலை ஆதரித்துச் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். “எங்கள் மக்களுக்கெதிராக இஸ்ராயேல் அரசு செய்துவரும் கோரமான குற்றங்களின் பதில் நடவடிக்கையே இது. இப்படியான தாக்குதல்களை நாமே செய்திருக்கக்கூடும்,” என்று அவ்வறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
இந்தத் தாக்குதல் நடந்த சமயத்தில் இஸ்ராயேல் வெளிவிவகார அமைச்சர் யாயிர் லபிட் நாட்டின் பாலைவனப் பகுதியான நெகாவ் நகரில் முக்கிய இராஜதந்திர மாநாடொன்றைக் கூட்டிப் பங்குபற்றிக்கொண்டிருந்தார். அரபு நாடுகளின் பிரதிநிதிகள் தவிர அமெரிக்க வெளிவிவகார அமைச்சரும் அதில் பங்குபற்றுகிறார்கள். அந்த நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது.
சில நாட்களுக்கு முன்னர் தான் பெர்ஷேபா நகரின் பல்பொருள் அங்காடியொன்றுக்கு வந்தவர்களை ஒருவன் கத்தியால் குத்தியதில் நால்வர் இறந்திருந்தார்கள். அக்கொலைகளில் ஈடுபட்ட தீவிரவாதியும் இஸ்லாமியக் காலிபாத் ஆதரவாளன் என்றும் அதற்காகச் சிறையிலிருந்தவனென்றும் இஸ்ராயேல் அரசு தெரிவித்தது. அப்பகுதியைச் சேர்ந்த நாடோடி பெதுவீன் இனத்தைச் சேர்ந்த அவன் ஒரு இஸ்ராயேல் பிரஜையாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்