இஸ்ராயேலை ஒரு நாடாக அங்கீகரிக்காத பாகிஸ்தான் அங்கே தனது ராஜதந்திரிகளை அனுப்பியிருக்கிறது.

இஸ்ராயேலை ஒரு நாடாக அங்கீகரிக்க மாட்டோம் என்று தீவிரமாகக் குறிப்பிட்டு வரும் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. இஸ்ராயேலுடன் ராஜதந்திர உறவுகள் எதையும் கொண்டிருக்காத நாடுகளிலொன்று இந்தோனேசியா. இந்த இரண்டு நாடுகளின் ராஜதந்திரிகளையும் கொண்ட குழுவொன்று தற்போது இஸ்ராயேலுக்கு இரகசியமாக விஜயம் செய்திருப்பதாகவும், அவர்களின் குறிக்கோள் நாடுகளுக்கிடையே சுமுகமான உறவை ஏற்படுத்துவதுமாகும் என்று பாகிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் முன்பு அமைச்சராக இருந்த நஷிம் அஷ்ரப் பாகிஸ்தானியக் குழுவுக்குத் தலைமை தாங்கி வருகிறார். பாகிஸ்தான் பத்திரிகையாளர் அஹ்மத் குரைஷியும் அக்குழுவில் ஒருவர். இஸ்ராயேலுக்கு முன்பு விஜயம் செய்ததால் சமீபத்தில் அவர் பாகிஸ்தானிய அரச தொலைக்காட்சியால் வெளியேற்றப்பட்டவர். இஸ்ராயேலின் வெவ்வேறு பாகங்களுக்குச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படும் இந்தோனேசிய, பாகிஸ்தான் குழுவினர் இவ்வார இறுதியில் இஸ்ராயேல் ஜனாதிபதி இஸாக் ஹர்ஸோக்கையும் சந்திக்கவிருக்கிறார்கள். இந்தோனேசிய அரசின் உயர்மட்ட உறுப்பினர்கள் அந்த நாட்டிலிருந்து விஜயம் செய்யும் குழுவில் பங்கெடுக்கிறார்கள்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் காலத்தில் இஸ்ராயேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஆபிரகாம் ஒப்பந்தத்தின் பின்னர் இஸ்லாமிய நாடுகள் சில இஸ்ராயேலுடன் நெருங்கி வந்துகொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் உலகின் மிகப்பெரிய எண்ணிக்கையில் முஸ்லீம்களைக் கொண்ட நாடான இந்தோனேசியாவும் படிப்படியாக இஸ்ராயேலுடன் தனது தொடர்புகளை அதிகரித்திருக்கின்றது. 

இந்தோனேசியாவுக்கும் இஸ்ராயேலுக்கும் இடையே வர்த்தகத் தொடர்புகள் சமீப வருடங்களில் கணிசமான அளவில் அதிகரித்து வருகின்றன. சுமார் 500 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான பெறுமதியை அது எட்டியிருக்கிறது. சமீபத்தில் அவ்விரு நாடுகளுக்கும் இடையே உறவுகள் சுமுகமாகக்கூடிய அறிகுறிகள் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் அந்தோனி பிளிங்கள் குறிப்பிட்டிருக்கிறார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *