ஈரானியப் பெண்களின் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டங்கள் வலுக்கின்றன: ஆறு பேர் இறப்பு.

பழக்கவழக்கங்களைக் கண்காணிக்கும் ஈரானிய பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டு, மாஷா அமினி என்ற இளம் பெண் அங்கேயே இறந்துவிட்டாள். அவளது மரணம் ஒரு கொலையே என்றும் அதைச் செய்தவர்களை நீதியின் முன்னர் நிறுத்தவேண்டும் என்றும் கோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் நாடெங்கும் பரவி வருவதாகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. சமூக வலைத்தளங்களிலும் ஈரானியப் பெண்கள் பல வழிகளிலும் தமது எதிர்ப்பை நாட்டின் அரசுக்கும், முல்லாக்களுக்கும் எதிராகக் காட்டி வருகிறார்கள்.

நாடெங்கும் பல போராட்ட ஊர்வலங்கள் நடந்திருக்கின்றன. பெண்கள் பலர் தமது ஹிஜாப்பை எரித்துவிட்டு, தலைமுடியை வெட்டிக்கொள்கின்றனர். ஈரானிய அரசின் செய்திகளின்படி நாட்டின் 15 நகரங்களில் மக்கள் போராட்டங்கள் மூலமாக ஐந்தாவது நாளாகத் தமது எதிர்ப்பைக் காட்டி வருகிறார்கள். கலவரங்களை அடக்க அனுப்பப்படும் அரசின் பொலீசாரால் சுமார் 1,000 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பொலீஸ் வாகனங்கள் வழிமறிக்கப்பட்டதுடன் சிலவற்றை மக்கள் எரித்து அழித்திருக்கிறார்கள். 

இறந்துபோன அமினியின் மாகாணமான ஈரானிய குர்டிஷ்தான் பகுதியின் ஆளுனர் வெளியிட்டிருக்கும் விபரங்களின்படி அங்கே நடந்த போராட்டங்களில் ஏற்பட்ட கைகலப்புகளில் இறந்தவர்கள் எண்ணிக்கை மூன்று. அமினியின் தந்தையார் தனது மகளின் மரணம் ஒரு கொலை என்று நிச்சமாகக் குறிப்பிடுகிறார். ஏற்பட்டிருக்கும் போராட்டங்களால் ஓரளவு தளம்பிப்போயிருக்கிறது ஈரானிய அரசின் உயர்மட்டமும், இஸ்லாமியத் தலைமையும். 

நாடு முழுவதும் நடந்திருக்கும் போராட்டங்களில் பொலீசாரும், எதிர்ப்பாளர்களிடையே ஏற்பட்ட மோதல்களில் ஆறு பேர் இறந்திருப்பதாகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. மக்களின் போராட்டங்கள் வலுத்தாலும் ஈரானிய அரசியல், இஸ்லாமியத் தலைமை அவற்றை இரும்புக் கரங்களால் எதிர்கொள்ளலாம் என்று பல மனித உரிமை இயக்கங்களால் சுட்டிக் காட்டப்படுகிறது. கடந்த வருடங்களில் வெவ்வேறு காரணங்களால் ஏற்பட்ட பொறிகள் இதேபோன்று நாட்டில் பரவியபோது ஆயிரக்கணக்கானோரைப் பொலீசார் கொலைசெய்திருப்பதாகத் தெரியவந்திருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *