கொரோனாத்தொற்று முடக்கம் தீவிபத்தில் பலர் இறக்கக் காரணமானதாகச் சீனர்கள் நகர முடக்கத்தை எதிர்த்துக் குரலெழுப்புகிறார்கள்.

உலகின் பெரும்பாலான நாடுகள் கொவிட் 19 காலத்தைக் கடந்துவிட்டன. தொற்றுப் பரவாமல் நகரங்களையோ, பிராந்தியங்களையோ முடக்குதலை எவரும் செய்வதில்லை. சீனா மட்டும் தொடர்ந்தும் கொவிட் தொற்றியவர் எவருமே பொதுவில் நடமாடலாகாது என்ற கோட்பாட்டைக் கைப்பிடித்துத் தனது கொவிட் 19 முடக்கங்களை நடத்தி வருவதால் அந்த நாட்டு மக்கள் அதை ஆங்காங்கு எதிர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஷங்காய் நகரில் அப்படியொரு போராட்டத்தில் நாட்டின் தலைவர் ஷீ யின்பிங் பதவி விலகவேண்டும் என்ற குரலும் கேட்டதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

கொரோனாத் தொற்றினால் இறந்தவர்கள் எண்ணிக்கையொன்றும் பெரியதாக இல்லாவிடினும் நாட்டில் தினசரிப் பரவல்களின் எண்ணிக்கை கொரோனா ஆரம்பித்த காலத்தை விட அதிக அளவில் இருப்பதாகப் புள்ளிவிபரங்கள் வெளியிடப்படுகின்றன. கடந்த வெள்ளியன்று சுமார் 40,000 பேர் அத்தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டது.

கொரோனாத்தொற்று முடக்கத்தால் ஏற்படும் பக்க விளைவுகளால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. இவ்வருட முற்பகுதியில் ஷங்காய் நகரம் இரண்டு மாதங்கள் முடக்கப்பட்டிருந்தது. அச்சமயத்தில் நாளாந்த உணவுக்கே கஷ்டப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்னர் ஷிங்ஷியாங் மாகாணத்தில் கொரோனா முடக்கம் நிலவியபோது ஒரு குடியிருப்புப் பகுதியில் தீவிபத்து ஏற்பட்டது. அவ்விபத்தில் 10 பேர் இறந்துவிட்டார்கள். அதன் காரணம் பொதுமுடக்கமே அவர்களுக்கான மீட்புப் பணி ஒழுங்காகக் கிடைக்கவில்லை என்று வதந்தி பரவி சமூகவலைத்தளங்களிலும் காணக்கிடக்கிறது. அது உண்மையல்ல என்று அரசு மறுப்புத் தெரிவித்தாலும் மக்களிடையே நம்பிக்கை எழவில்லை. தீவிபத்தில் மாட்டிக்கொண்டவர்களுக்குச் சரியான உதவிகள் செய்தாதவர்களைத் தேடிப்பிடித்துத் தண்டிப்பதாக அரசு சார்பில் உறுதி கொடுக்கப்பட்டிருக்கிறது.

அந்த நிகழ்ச்சியை அடுத்தே சனிக்கிழமையன்று பல மில்லியன் மக்கள் வாழும் ஷங்காயில் ஒரு கொரோனா முடக்க எதிர்ப்பு நிகழ்ச்சி நடந்தது. இறந்தவர்களைக் கௌரவப்படுத்த மக்கள் சதுக்கத்தில் மலர்களை வைத்ததுடன் அரசுக்கெதிரான கோஷங்களையும் போட்டார்கள். அதுபற்றிய படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியிருக்கின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *