கவர்ச்சியுடைப் பெண்களுடன் போதித்து வந்த துருக்கியச் சாமியாருக்கு 8,658 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

உலகளவில் தனது போதனைகளைப் பரப்பிவந்த ஹருன் யாஹ்யா துருக்கிய நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுத் தன் மீது சாட்டப்பட்ட குற்றங்களுக்காக 8,658 வருடங்கள் சிறைத்தண்டனை பெற்றிருக்கிறார். ஏற்கனவே ஒரு நீதிமன்றத்தில் 1,076 வருடங்கள் சிறைத்தண்டனை அவர்மீது விதிக்கப்பட்டிருந்தது. அதை எதிர்த்த இஸ்தான்புல் மேன்முறையீட்டு நீதிமன்றம் தண்டனையின் காலத்தை  மேலும் அதிக வருடங்களால் நீட்டியிருக்கிறது. அட்னான் ஒக்தார் என்ற உண்மையைப் பெயர் கொண்ட யாஹ்யாவுடன் மேலும் 10 பேருக்கும் அதேபோன்ற நீண்டகாலச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

2018 இல் கைது செய்யப்பட்ட ஒக்தார் திரிபுபடுத்தப்பட்ட ஒரு இஸ்லாமியக் கோட்பாட்டை உண்டாக்கியவர். Atlas of Creation என்ற பெயரில் அவர் பல புத்தகங்களைப் பாகங்களாக எழுதி அதன் மூலம் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு தவறானது என்றும் அதுவே சர்வதேசத் தீவிரவாதத்துக்கு வேரிடுகிறது என்றும் விபரிக்கிறார். தனது சொந்தக் கோட்பாடு ஒன்றைப் போதித்து வந்திருக்கிறார். அவைகளைப் பற்றி அவர் 300 புத்தகங்களை எழுதி 73 மொழிகளில் வெளியிட்டிருப்பதாக அவரது விசுவாசிகள் குறிப்பிடுகிறார்கள். அவர் சொந்தமாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் உருவாக்கித் தனது விசுவாசிகளுக்குப் போதித்து வந்திருக்கிறார்.

இஸ்தான்புல் நகரின் குன்றுகளொன்றில் உல்லாச மாளிகை, பூங்கா, தொலைக்காட்சி ஸ்டூடியோ ஆகியவற்றை அமைத்துத் தன்னைச் சுற்றி ஒரு குழுவினரோடு அவர் வாழ்ந்தார். அவர்களில் சிலர் பெண்கள். ஒரே மாதிரியான அழகுபடுத்தலுடன் கவர்ச்சியாக உடையணிந்திருக்கும் அவர்களை kittens என்று அவர் குறிப்பிடுவதுண்டு. அவர்களைத் தன்னருகில் வைத்துக்கொண்டே தனது தொலைக்காட்சி பிரசங்கங்களைஅவர்  நடத்தி வந்தார்.

குறிப்பிட்ட பெண்களைச் சுற்றி கட்டுடலுள்ள சில ஆண்களையும் அவர் வைத்திருந்தார். அந்தப் பெண்கள் பாலியல் இச்சைக்குப் பயன்படுத்தப்படுவது வழக்கம். 1998 லிருந்தே அட்னான் ஒக்தார் ஆண்மையை இழந்துவிட்டார் என்றும் அவர் மற்றவர்களைப் பாலியல் உறவுகளில் இயக்கவைத்து ரசிப்பவர் என்றும் ஒரு போலிச் சாமியார் என்றும் அவரது விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *