துருக்கிய பாராளுமன்றத்தில் “தவறான தகவல்கள் மீதான கட்டுப்பாடு” சட்டம் நிறைவேறியது.

ஊடகங்கள், சமூகவலைத்தளங்கள் மீது தனது கட்டுப்பாட்டை இறுக்கும் சட்டங்கள் துருக்கிய பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. அச்சட்டங்கள் பத்திரிகையாளர் அட்டை எவரெவருக்கு வினியோகம் செய்யப்படலாம் என்பது முதல் சமூகவலைத்தளங்களில் எந்தவிதமான செய்திகள் இருக்கலாம் என்பது வரை கண்காணிக்கவிருக்கின்றன. 

பத்திரிகையாளர்களாகக் கடமையாற்றும் அனுமதி பெற விரும்புகிறவர்கள் கடந்த ஐந்து வருடங்களில் அரசின் பாதுகாப்புச் சட்டங்களை மீறாதவர், பொய் பிரட்டு வழக்குகளில் தண்டிக்கப்படாதவர், அரச இரகசியங்களை வெளியிடாதவர், பொதுமக்களின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்காதவராக இருக்கவேண்டும் என்கிறது அச்சட்டம். துருக்கியில் இயங்கும் இணையத்தளங்களின் மீதும் அச்சட்டம் அதிகாரம் கொள்ளும். அதன் மூலம் அவற்றில் அரசு தான் விரும்பும் விபரங்களை வெளியிடலாம். அத்தளங்களில் ஊடகவியலாளர்களாக இருப்பவர்களும் புதிய சட்டங்களுக்கு அடங்கியே பணியாற்றவேண்டும்.

சமூகவலைத்தளங்கள் மீதும் புதிய சட்டத்தின் மூலம் துருக்கிய அரசின் பிடி இறுகுகிறது. துருக்கியில் செயற்படும் சமூகவலைத்தளங்கள் துருக்கிய குடிமக்கள், அல்லது துருக்கியில் வாழ்பவர்களால் மட்டுமே இயக்கப்படலாம். அத்தளங்களில் பொய்ச்செய்திகள், வெறுப்புக் கருத்துகள், அரச இரகசியங்கள், மக்களின் அமைதியைக் குழப்பும் விபரங்கள் பதிவு செய்தலோ, வெளியிடலோ தண்டிக்கப்படும். குறிப்பிட்ட நிறுவனம் தண்டமாக அதன் சர்வதேச வருமானத்தின் 3 % வரை அரசுக்குக் கொடுக்கவேண்டி வரலாம்.

சமுகவலைத்தளங்களில் பொய்ச்செய்திகள், வெறுப்புக் கருத்துகள், அரச இரகசியங்கள், மக்களின் அமைதியைக் குழப்பும் விபரங்களைப் பரப்புகிறவர்களுக்குத் தண்டனையாக 3 வருடங்கள் வரையிலான சிறை காத்திருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *