ரோஹின்யா இனத்தினரின் தலைவர்களிருவர் பங்களாதேஷில் கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

மியான்மாரிலிருந்து விரட்டப்பட்டு வந்த ரோஹின்யா இனத்தினருக்கு அடைக்கலம் கொடுத்த பங்களாதேஷ் அரசு பயந்தது போலவே ரோஹின்யாக்களுக்கிடையே வன்முறைகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. அச்சமூகத்தின் வெவ்வேறு அரசியல் தலைமைகளுக்கிடையே இருக்கும் முரண்பாடுகள் வன்முறைத் தாக்குதல்களாக வளர்ந்து பல கொலைகள் நடந்திருக்கின்றன. சனியன்று ரோஹின்யாக்களின் அகதிகள் முகாம்களில் செயற்படும்  சமூகத் தலைவர்கள் இருவரை ஒரு கூட்டம் கத்தியால் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்திருப்பதாக பங்களாதேஷ் பொலீஸ் தெரிவிக்கிறது. 

பங்களாதேஷில் ரோஹின்யா அகதிகளுக்காக ஐ.நா-வின் உதவியுடன் நிறுவப்பட்டுப் பராமரிக்கப்படும் முகாம்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் வாழ்ந்து வருகின்றனர். தற்காலிகக் கொட்டகைகள் அவர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கொட்டகையிலும் ஒரு நபர் தலைமை தாங்கி நடத்த நியமிக்கப்பட்டிருக்கிறார். அகதிகள் முகாம்களில் அளவுக்கதிகமானோர் பெரும் நெருக்கடியுடன், அடிப்படைத் தேவைகளின்றி வாழ்ந்து வருவதாகத் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அகதிகளிடையே போதை மருந்து, விபச்சாரம் போன்ற சட்டவிரோதமான நடத்தைகளில் ஈடுபடுகிறவர்களுக்கும்,  அகதிகளின் தேவைகளைக் கவனிப்பதற்காகத் தலைமை தாங்குபவர்களுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டு வன்முறைகளாக மாறியிருக்கின்றன. தவிர, மியான்மாரில் தமது உரிமைகளுக்காக ஆயுதமெடுத்துப் போராடும் அரக்கான் விடுதலை இராணுவமும் [Arakan Rohingya Salvation Army]  தனது நோக்கத்தை எதிர்ப்பவர்களை ஒழித்துக்கட்டி வருகிறது. அந்த அமைப்பு ஒரு தீவிரவாத அமைப்பு என்று பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது.

சனியன்று பங்களாதேஷ் அகதி முகாம் கொட்டகைகளில் கொல்லப்பட்டவர்கள் அரக்கான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. அகதிகள் முகாம்கள் இருக்கும் பகுதியின் பொலிஸ் தலைமையின் கூற்றுப்படி கடந்த மூன்று மாதங்களில் அவ்வியக்கத்தினர் 14 ரோஹின்யா இனத்தவரைக் கொன்றிருக்கிறார்கள். காரணம் அகதிகளை மிரட்டி முகாம்களில் தமது கட்டுப்பாட்டில் வைத்துத் போதைப்பொருட்களை விற்பதற்காகும் என்று குறிப்பிடப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *