லிஸ் டுருஸ் முன்வைத்த இடைக்கால வரவு செலவுத் திட்ட வரிக்குறைப்புகள் குப்பைக் கூடைக்குள் போயின.

லிஸ் டுருஸ் பதவியேற்றம், மகாராணியின் மரணச்சடங்குகள், லிஸ் டுருஸ் அரசில் மிகப்பெரிய வரிக்குறைப்புகள் என்று தலைப்புகளின் பின்னர் வரிக்குறைப்புகளும் அதை எப்படிச் சர்வதேச நிதி நிறுவனங்கள் அங்கீகரிக்கவில்லை, பவுண்டின் பெறுமதி வீழ்ச்சி என்று தொடர்ந்தன. லிஸ் டுருஸ் தனது சகாவுடன் சேர்ந்து தீட்டிய வரிக்குறைப்புக்குச் சகாவையே அவசரமாகப் பலிகொடுத்தார். ஆனால், கட்சிக்குள்ளிருந்தும், வர்த்தக உலகத்திலிருந்தும் அவருடைய நடவடிக்கைகளுக்கான மதிப்பீடு உயரவில்லை. எனவே, அனுபவமுள்ள முன்னாள் அமைச்சரான ஜெரோமி ஹண்டை நிதியமைச்சராக்கினார்.

லிஸ் டுருஸ் அரசு மூன்று வாரங்களாக பிரிட்டிஷ் பொருளாதார அமைப்பு நடுங்குவதை அனுபவித்துக்கொண்டிருக்கிறது. நாணய மதிப்பை ஸ்திரமாக்கி, உயர்ந்துவரும் வீட்டுக்கடன் வட்டியைக் குறைத்து, வர்த்தக உலகைச் சமாதானப்படுத்தல் முயற்சியில் தோல்வியே கிடைத்தது. எனவே புதிய நிதியமைச்சர் இன்று புதியதொரு வரவுசெலவுத் திட்டத்தின் பகுதிகளை வெளியிட்டிருக்கிறார். ஹண்ட் வெளியிட்டிருக்கும் விபரங்களில் லிஸ் டுருஸ் தனது முக்கிய புள்ளிகளாக அறிவித்திருந்த வரிக்குறைப்புகளில் மிகப்பெரும் பாகம் தூக்கியெறியப்பட்டிருக்கிறது.

லிஸ் டுருஸ் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட்டபோது எந்தெந்த வரிக்குறைப்புகளை வைத்து மீண்டும் பிரிட்டிஷ் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதாக உறுதியளித்தாரோ அவைகள் காகிதக் கோட்டையாகத் தகர்ந்திருக்கின்றன. அதனால், அவருடைய கட்சிக்குள்ளிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவராக அவரைப் பதவி விலகக் கோரி வருகிறார்கள். 

ஜெரோமி ஹண்ட் வர்த்தக உலகை மட்டுமன்றி தனது கட்சிக்குள்ளிருந்து டூருஸ் விலகவேண்டும் என்று கோருபவர்களையும் எதிர்கொள்கிறார். டுருஸ் தான் தொடர்ந்தும் பிரதமராக இருப்பார் என்று குறிப்பிட்டிருக்கும் அவர் தான் பிரதமராகும் எண்ணத்தில் இல்லை என்று மறுத்து வருகிறார். ஹண்ட் பதவியேற்ற பின்னர் இதுவரை டுருஸ் பகிரங்க நிகழ்ச்சிகளிலோ ஊடகங்களிலோ தலை காட்டவில்லை. ஹண்ட் தான் பத்திரிகையாளர்களைச் சந்தித்து தொலைக்காட்சிகளில் அரசியல் வாதாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.  டுருஸ் பதவி விலகும் காலம் அதிக தூரத்திலில்லை என்ற கிசு சிசுவில் ஒலி அதிகமாகி வருகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *