“ரோஹின்யா அகதிகள் மியான்மாருக்குத் திரும்பிப்போகவேண்டும்”, என்கிறார் பங்களாதேஷ் பிரதமர்.

தனது நாட்டிலிருக்கும் அகதிகள் முகாம்களின் நெரிசலுக்குள் வாழும் ரோஹின்யா அகதிகளை வெளியேற்றுவதில் பங்களாதேஷ் அரசின் ஆர்வம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தற்சமயம் பங்களாதேஷுக்கு விஜயம் செய்திருக்கும் ஐ.நா-வின் அகதிகள் உரிமை பொறுப்பாளரான மிஷேல் பஷலெட்டிடம் பிரதமர் ஷேய்க் ஹசீனா தனது நாட்டின் நிலைப்பாட்டைத் தெரிவித்தார். 

பங்களாதேஷ் – மியான்மார் எல்லையை அடுத்து பங்களாதேஷ் பிராந்தியத்தினுள்ளிருக்கும் Cox’s Bazar அகதிகள் முகாமுக்கு பஷலெட் விஜயம் செய்தார். நெரிசல் மட்டுமன்றி ஆரோக்கிய வசதிகள் மோசமாக இருக்கும் குறிப்பிட்ட அகதிகள் முகாமுக்குள் சுமார் 700, 000 ரோஹின்யா அகதிகள் வாழ்ந்து வருகிறார்கள். அப்பிராந்தியத்தினுள் பாதுகாப்புப் பிரச்சினைகளும் பெருமளவில் அதிகரித்திருக்கின்றன.

Cox’s Bazar அகதிகள் முகாமுக்குள் ரோஹின்யா இனத்தவரின் சார்பாக ஆயுதப் போர் நடத்த விரும்புபவர்களின் நடமாட்டம் பங்களாதேஷ் அரசியலில் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் என்று நம்பப்படுகிறது. அதை வலுப்படுத்துவது போலவே அந்த முகாமுக்குள் வன்முறைகள், கொலைகள், போதை மருந்து விற்பனை, கடத்தல்கள் ஆகியவை மலிந்து வருகின்றன. தனது நாட்டுக்குள் இஸ்லாமியத் தீவிரவாதம், வன்முறை ஆகியவை வளர்ந்திருப்பதைக் கட்டுப்படுத்துவதில் திக்குமுக்காடும் பங்களாதேஷ் அரசு ரோஹின்யா அகதிகளை மீண்டும் மியான்மாருக்கு அனுப்புவதையே விரும்புகிறது.

பங்களாதேஷ் அரசு பல தடவைகள் மியான்மாருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் கூடச் சாதகமான பதில் இதுவரை கிடைக்கவில்லை. நாட்டில் ஜனநாயகத் தேர்தல் மூலம் ஆண்ட அரசைக் கவிழ்த்து இராணுவ ஆட்சி நடத்திவரும் மியான்மார் ஆசிய நாடுகள் எல்லாவற்றாலும் ஒதுக்கபடுவதால் ரோஹின்யா இனத்தவர் பற்றிய தீர்வு எதுவும் தெரியவுமில்லை. இதையே ஐ.நா பல தடவைகள் சுட்டிக்காட்டி வருகிறது. 

அகதிகள் திரும்பிச் செல்லல் என்பது அவர்கள் தாமே விரும்பிச் செய்யவேண்டியதே தவிர கட்டாயப்படுத்தலால் அல்ல என்பதை மிஷல் பஷலெட் தனது விஜயத்தின் போது மீண்டும் கோடிட்டுக் காட்டினார். மியான்மார் இருக்கும் அரசியல் நிலையில் அங்கேயிருந்து ஏற்கனவே திட்டமிட்டுத் துரத்தப்பட்டு அந்த நாட்டின் மீது நம்பிக்கையற்ற ரோஹின்யா இனத்தவர்களைத் தற்போது திருப்பியனுப்புவது சாத்தியமல்ல என்பது ஐ.நா-விம் கருத்தாகும். 

முகாம்களில் சென்று அகதிகளைச் சந்தித்த பஷலெட்டிடம், “மியான்மாரில் தமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல் தங்களைத் திருப்பியனுப்ப வேண்டாம்,” என்று பலரும் வேண்டிக்கொண்டார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *