மியான்மார் மாணிக்ககல் சுரங்கமொன்றில் மண்சரிவும், 100 பேரைக் காணவில்லை.

உலகின் பெருமளவில் பரவியிருக்கும் பச்சை மாணிக்கக்கற்கள் மியான்மாரிலிருந்து கிடைப்பவை. மியான்மாரின் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருக்கும் அச்சுரங்கங்கள் மிகவும் ஆபத்தானவை. கச்சின் மாநிலத்திலிருக்கும் அச்சுரங்கங்களிலொன்றில் ஏற்பட்ட மண்சரிவினுள் அகப்பட்டுக்கொண்ட 70 – 100 பேரைக் காணவில்லை.

300 பேரைக்கொண்ட மீட்புப் படையினர் அச்சுரங்கத்தின் மேலிருக்கும் குளத்தினுள் காணாமல் போன தொழிலாளர்களைத் தேடி வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை சுமார் 25 பேர் மாணிக்கக் கற்சுரங்கத்தின் இடிபாடுகளிடையே காப்பாற்றப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள்.

ஹ்பகந்த் என்ற இடத்திலிருக்கும் குளமொன்றின் கீழிருக்கும் அந்தச் சுரங்கங்கள் ஒன்றுடனொன்று இணைந்தவை. மிகவும் ஆபத்தான அப்பகுதியிலிருக்கும் சுரங்கத்தினுள் பாதுகாப்பும் மிக மோசமாகவே இருப்பதாகப் பல சாட்சிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள். மிகக் குறைந்த சம்பளத்தில் இராணுவம் அங்கே பலரை வைத்து வேலை வாங்குகிறது. 

அடிக்கடி மண்சரிவுகள் ஏற்படும் அப்பகுதியில் சுரங்கத் தொழிலார்கள் இறப்பது சாதாரணம். 2020 இல் சுமார் 300 தொழிலாளிகள் இதேபோன்ற மண்சரிவொன்றினுள் மாட்டிக்கொண்டு இறந்தார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்