கடை ஒன்றினுள் இரு பெண்களை கத்தி முனையில் பிடித்த நபர் கைது!

பாரிஸ் Bastille பகுதியில் பரபரப்பு பாரிஸ் நகரின் 12 ஆவது நிர்வாகப் பிரிவில் (12e arrondissement) உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள் இரண்டுபெண்களைப் பணயக் கைதிகளாகப்பிடித்து வைத்திருந்த நபர் ஒருவர் பலமணி நேரங்களின் பின் பொலீஸாரால்கைது செய்யப்பட்டார். அச் சம்பவம் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட ஒன்றல்ல என்று பாதுகாப்புஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை முதல் நீடித்த இந்தப்பணய நாடகம் இன்று காலையிலேயே முடிவுக்கு வந்தது. கத்தியுடன் கடைக்குள் நுழைந்த துனீசியா நாட்டவர் ஒருவரே கடை உரிமையாளரான பெண்ணையும் அவரது மகளையும் உள்ளே பிடித்துப் பணயக் கைதிகளாக வைத்துக் கொண்டார் எனக் கூறப்படுகிறது.

விசேட கொமாண்டோ பொலீஸார் உடனடியாக கடை அமைந்துள்ள பிரதேசத்தைச் சுற்றிவளைத்தனர். கைதிகளை ஆபத்தின்றி மீட்பதற்காக அந்த நபருடன் பேசும் முயற்சிகள் நேற்றிரவு முழுவதும் நடந்தன.பெண்களில் ஒருவரை மட்டும் விடுவித்த ஆயுததாரி, மற்றப் பெண்ணை உள்ளே தொடர்ந்தும் தடுத்து வைத்திருந்தார்.அவர் நீண்ட காலமாக மனநோயால் பாதிக்கப்பட்ட பின்னணி உடையவர் எனக் கூறப்படுகிறது.

பெண்களைவிடுவிப்பதாயின் நீதி அமைச்சருடன் பேசுவதற்குத் தன்னை அனுமதிக்க வேண்டும் என்று அவர் நிபந்தனை விதித்தார் எனவும் கூறப்படுகிறது. விசேட கொமாண்டோக்கள் (Research and Intervention Brigade – BRI)இன்று காலை ஒருவாறு அந்த நபரைக் காயம் இன்றிக் கைது செய்தனர்.அவரது பிடியில் இருந்த இரண்டாவது பெண்ணும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார் என்று பாரிஸ்பொலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்தப் பணய நாடகம் நடந்த Bastille பகுதியின் சில வீதிகளில் நேற்றிரவு போக்குவரத்துகள் தடுக்கப்பட்டிருந்தன. –

குமாரதாஸன். பாரிஸ்.