நிலக்கரிச் சுரங்க விபத்து துருக்கியில். 41 இறப்புகள், சுரங்கத்துக்குள் சுமார் ஐம்பது பேர் மாட்டிக்கொண்டார்கள்.

கருங்கடலை அடுத்திருக்கும் அமாஸ்ரா நகரத்தின் நிலக்கரிச் சுரங்கத்தினுள்  வெள்ளியன்று மாலை விபத்தொன்று எற்பட்டது. பல நூறு மீற்றர் ஆழத்தில் மெத்தான் வாயு ஏற்படுத்திய வெடியால் சுமார் 28 பேர் இறந்திருப்பதாக மக்கள் ஆரோக்கிய அமைச்சர் பெர்ஹத்தின் கோகா தெரிவித்தார். மாலை இருட்டாகும் நேரத்தில் விபத்து உண்டாகியதால் மீட்புப் பணிகள் கடினமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மெத்தான் வாயு வெடித்தபோது சுரங்கத்தினுள் சுமார் 110 பேர் வேலைசெய்து கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு சாரார் மீட்புப்படையினரின் உதவியுடனும், மேலும் சிலர் தாமாகவும் வெளியே வந்து விட்டனர். ஆனால், சுமார் 50 பேர் தொடர்ந்தும் உள்ளே மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒரு சாரார் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

துருக்கியத் தொலைக்காட்சி வெளியிட்டிருக்கும் படங்களில் நிலக்கரிச் சுரங்கத்தினுள் இருப்பவர்களின் உறவினர்கள் அதன் வாசலுக்குச் சென்று மீட்புப் பணிகள் நடப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஜனாதிபதி எர்டகான் சனிக்கிழமைக்கான தனது திட்டங்களை மாற்றிக்கொண்டு அந்தச் சுரங்கத்தின் மீட்புப் பணிகள் நடக்குமிடத்துக்கு விஜயம் செய்யவிருக்கிறார்.

2014 இல் துருக்கியின் மேற்குப் பாகத்திலிருக்கும் நிலக்கரிச்சுரங்கம் ஒன்றுக்குள் வெடித்ததால் விபத்து உண்டாகியது. அந்த விபத்தில் இறந்தோர் 301 பேராகும்.

சாள்ஸ் ஜெ. போமன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *