“நவம்பரில், பாலியில் நடைபெறவிருக்கும் ஜி 20 நாடுகளின் மாநாட்டில் சீன, ரஷ்ய ஜனாதிபதிகள் பங்குபற்றுவார்கள்.”

ரஷ்ய – உக்ரேன் போரினால் சர்வதேச ரீதியில் ஏற்பட்டிருக்கும் அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளை மட்டுப்படுத்தும் நோக்கத்தில் நடுவராக முயலும் உலகத் தலைவர்களில், இந்தோனேசிய ஜனாதிபதி யூகோ வுடூடுவும் சேர்ந்துகொண்டிருக்கிறார். பிரபல இந்தோனேசிய சுற்றுலாத் தீவான பாலியில் நடக்கவிருக்கும் ஜி 20 மாநாட்டில் கலந்துகொள்ள சீனாவின் ஜனாதிபதியும், ரஷ்யாவின் ஜனாதிபதியும் வரவிருப்பதாகத் தன்னிடம் கூறியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை ஜி 20 நாடுகளான தென் கொரியா, ஜப்பான் ஆகியவையும் மேற்கு நாடுகளுடன் சேர்ந்து கண்டித்திருக்கின்றன. சீனாவோ அதைச் செய்யாமல் சமீப மாதங்களில் ரஷ்யாவுடன் முன்னரை விட நெருக்கமாக உறவுகளில் ஒன்றுபட்டு வருகிறது. இந்தோனேசியாவில் நடக்கவிருக்கும் ஜி 20 நாடுகளின் மாநாட்டில் தான் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போருக்குப் பின்னர் முதல் தடவையாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் தலைவர்கள் ஒரே நேரத்தில் கூடவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தினும், வுடூடுவும் தமது தொலைபேசிப் பேச்சுவார்த்தைகளில் பாலியில் நடக்கவிருக்கும் மாநாடு பற்றிப் பேசியதாக ரஷ்ய தரப்பிலிருந்து குறிப்பிடப்பட்டாலும் அதில் புத்தின் நேரடியாகப் பங்கெடுப்பது பற்றிக் குறிப்பிடவில்லை. சீனாவின் வெளிவிவகார அமைச்சிலிருந்து ஜனாதிபதி ஷீ ஜின்பிங் இந்தோனேசியாவுக்குச் செல்வது பற்றி எவ்வித செய்தியும் வெளியாகவில்லை. கொவிட் 19 பரவலுக்குப் பின்னர் கடுமையான தொற்றுக்கட்டுப்பாடுகளைக் கைக்கொள்ளும் சீனாவின் ஜனாதிபதி கொரோனாக்காலத்துக்குப் பின்னர் வெளிநாட்டுக்குச் செல்லும் முதலாவது தருணம் இதுவாகவே இருக்கும்.

இந்தோனேசிய ஜனாதிபதி வுடூடு நடத்தவிருக்கும் ஜி 20 மாநாட்டுக்கு அமெரிக்க ஜனாதிபதி கலந்துகொள்வது ஏற்கனவே திட்டமிடப்பட்டிருக்கிறது. அவர் அங்கே சீன ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வாரென்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த மாநாட்டில் கலந்துகொள்ள உக்ரேன் ஜனாதிபதி செலென்ஸ்கிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *