துருக்கியிலிருந்து ஈரானியர் ஒருவரை ஈரானுக்குக் கடத்த உதவியதற்காகப் 11 பேரைக் கைதுசெய்திருக்கிறது துருக்கி.

சுவீடனில் வாழ்ந்துகொண்டு ஈரானில் சிறுபான்மையினரான அராபியர்களுக்குத் தனி நாடு கேட்டுச் செயற்பட்டு வந்த ஒருவரை இஸ்தான்புல்லிலிருந்து ஈரானிய உளவாளிகள் கடத்திச் சென்றிருக்கிறார்கள். அக்கடத்தல் நாடகத்தில் உதவியதற்காக 11 பேரைத் துருக்கிய இரகசியப் பொலீஸ் கைதுசெய்திருக்கிறது.  

சுவீடிஷ் குடிமகனான ஹபீப் சாஹாப் ஈரானில் அராபியர்கள் செறிந்து வாழும் எண்ணெய் வளமுள்ள பிரதேசமான குஸெஸ்தான் பகுதியில் அராபியர்களுக்குத் தனி நாடு கோரிப் போராடும் ASMLA ( Arab Struggle for the Liberation of Ahwaz) என்ற அமைப்பைச் சேர்ந்தவராகும்.

இவர் அஸெவாதி, ஹபீப் அஸெயுத் ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். ஈரானில் தாக்குதல்களை அவ்வப்போது நடத்திவரும் இவ்வியக்கத்தின் முக்கிய தாக்குதலாக 2018 இல் ஈரானிய இராணுவத்தினர் சிலர்மீது நடாத்தப்பட்ட அதிரடித்தாக்குதலொன்று குறிப்பிடப்படுகிறது. அவ்வியக்கத்தை ஈரான் தீவிரவாதிகள் என்று தடைசெய்திருக்கிறது.

ஈரானிய உளவுப்படையைச் சேர்ந்த பெண்ணொருவர் ஹபீப்பை சில இரகசிய விடயங்களைக் கையளிப்பதற்காக இஸ்லான்புல்லுக்கு வரவழைத்திருக்கிறார்கள். அதை நம்பி அங்கே சென்ற அவரை மயக்க மருந்து பாவித்துக் காரொன்றுக்குள் மடக்கியிருக்கிறார்கள். அதன் பின்னர் அவர் மனிதக் கடத்தல்காரர்களின் உதவியுடன் ஈரானிய உளவுப்படையால் ஈரானுக்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறார். 

காணாமல் போன ஹபீப் சில நாட்களின் பின்னர் கைது செய்யப்பட்ட ஒரு உளவாளி, குற்றவாளி என்று ஈரானியத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காட்டப்பட்டிருக்கிறார். 

சில நாட்களுக்கு முன்னர் மனித குலத்தின் எதிரியென்ற குற்றச்சாட்டுடன் மரண தண்டனையில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ரொஹொல்லா ஸம் ஈராக்கில் இருந்து கடத்தப்பட்டது போலவே ஹபீப்பின் கடத்தல் நாடகமும் திட்டமிட்டு நடாத்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

தனது நாட்டு அரசியலுக்கெதிராக இயங்குபவர்களை இப்படியாகக் கைப்பற்றுவதை ஈரான் வழக்கமாகக் கொண்டிருக்கிறது. அரசுக்கெதிரான குற்றவாளியாகச் சித்தரிக்கப்படுபவர்களை ஈரான் மரண தண்டனையின் மூலம் கொல்வதே வழக்கம் என்பதால் ஹபீப் சாபுக்கும் அதே கதி ஏற்படலாமென்று நம்பப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *