சுமார் பத்து வருடங்களுக்குப் பின்னர் முதல் தடவையாக துருக்கிய ஜனாதிபதி எமிரேட்ஸுக்கு விஜயம்.

வளைகுடாப் பிராந்தியத்தில் வெவ்வேறு திசைகளில் அரசியல் ஆர்வம் காட்டியதால் இதுவரை ஒருவரை விட்டொருவர் எட்டியிருந்த துருக்கியும், எமிரேட்ஸும் தமது உறவைப் புதுப்பிக்க விளைகின்றன. 2013 ம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக எர்டகான் எமிரேட்ஸுக்குப் பயணமாகவிருக்கிறார்.

“வளைகுடா நாடுகளில் வாழும் எங்கள் சகோதர நாடுகளின் ஒற்றுமையும், ஸ்திர நிலைமையும் எங்களுடையதும் கூட,” என்று குறிப்பிட்ட எர்டகான் தனது நாட்டின் ஏற்றுமதிகளில் 10 இடத்தை எமிரேட்ஸ் பெறுகிறது என்று சுட்டிக் காட்டினார். தனது விஜயம் இரண்டு நாடுகளுக்குமிடையே வரப்போகும் அரை நூற்றாண்டுக்கான நெருங்கிய உறவைக் கட்டியெழுப்பும் என்று குறிப்பிட்டார்.

காலநிலை மாற்றம், நீர், உணவு ஆகியவற்றுக்கு எதிர்காலத்தில் தட்டுப்பாடுகள் வராதிருக்க இரண்டு நாடுகளுக்குமிடையேயான கூட்டுறவு, தொழில்நுட்பம் ஆகியவற்றில் எமிரேட்ஸுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக எர்டகான் தெரிவித்தார். 

கத்தாருடனான உறவுகளை எமிரேட்ஸ், சவுதி அரேபியா, பஹ்ரேன் ஆகிய நாடுகள் 2017 இல் வெட்டிக்கொண்டதையடுத்து துருக்கிக்கும், எமிரேட்ஸுக்கும் இடையான பிளவும் அதிகரித்தது. கத்தாரும், துருக்கியும் நெருங்கிய நட்பு நாடுகளாக இருந்ததே அதற்கான காரணமாகும். 2021 இல் கத்தாரும் அதன் பக்கத்து நாடுகளும் தம்மிடையேயான பகையை மறந்து கைகுலுக்க ஆரம்பித்ததுடன் துருக்கியும் மீண்டும் எமிரேட்ஸுடன் நெருங்க ஆரம்பித்தது. 

அதன் பலனாக அபுதாபியின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் ஸயாத் துருக்கிக்கு விஜயம் செய்து பேச்சுவார்த்தைகள் நடத்தினார். அதையடுத்து எமிரேட்ஸ் 10 பில்லியன் டொலர் பெறுமதியான முதலிடுகளை துருக்கியில் முதலீடு செய்வதாக அறிவித்தது. 

சாள்ஸ் ஜெ. போமன்