ராஜபக்சே குடும்பத்தை விமர்சித்து வந்த பத்திரிகையாளர் வீட்டுக்கு துப்பாக்கியுடன் குண்டர்கள் விஜயம்.

சிறீலங்கா அரசில் முக்கிய பதவிகளை வகிக்கும் ராஜபக்சே குடும்பத்தினரைக் கடுமையாக விமர்சித்துவரும் ஊடகவியலாளர் சமுத்திக்க சமரவிக்கிரம. யு டியூப், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்ற ஊடகங்களின் மூலம் இவர் தனது பணியைச் செய்து வருகிறார். சமுத்திக்காவின் வீட்டுக்கு திங்களன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் குண்டர்கள் துப்பாக்கி சகிதம் வந்து தாக்கியதாகப் பொலீஸில் புகார் செய்யப்பட்டிருக்கிறது.

பல தடவைகளிலும் தான் வெவ்வேறு விதமான முறைகளில் மிரட்டல்களை எதிர்கொண்டிருப்பதாகக் குறிப்பிடும் சமுத்திக்க, தன்னைத் தாக்க வந்தவர்களின் பின்னணியும் காரணமும் தனக்குத் தெரியவில்லை என்கிறார். சமுத்திக்க வாழும் வீட்டுப் பகுதியிலிருந்த பாதுகாப்புக் காவலாளிகளைத் துப்பாக்கி முனையில் மிரட்டிய குண்டர்கள் வெள்ளை நிற வான் ஒன்றில் வந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.

“துப்பாக்கிச் சூடுகளின் சந்தம் கேட்டு நான் விழித்தெழுந்தேன். வீட்டுச் சாளரக் கண்ணடிகள் நொறுக்கப்பட்டு அவற்றினூடாக அசிங்கங்கள் வீட்டுக்குள் எறியப்பட்டன. இதன் பின்னணியில் யாரிருக்கிறார்கள் என்று தெரியாது, ஆனால், எவராயிருந்தாலும் என்னைப் பயப்படுத்த முடியாது,” என்கிறார் சமுத்திக்க.

ராஜபக்சே ஆட்சியில் உயர் பொலீஸ் உத்தியோகத்திலிருந்த ஒருவர் தான் அரசால் மிரட்டப்பட்டு, ஒடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டு பிரிட்டனில் அரசியல் தஞ்சம் புகுந்திருக்கிறார். அவரை இரண்டு வாரங்களுக்கு முன்னர் சமுத்திக்க நேர்காணல் செய்திருக்கிறார். 

அவர் பணியாற்றும் ஹிரு தொலைக்காட்சிக்கு எதிராக பொலீசார் இரண்டு வாரத்தின் முன்பு பொலீசார் விசாரணையொன்று ஆரம்பித்திருக்கிறார்கள். அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் சட்டத்துக்கெதிரான செய்கைகளில் ஈடுபடுவதாகவும், தமது உயிருக்கு மிரட்டல்கள் விடப்படுவதாகவும் பொய்யாகக் கதை பரப்புவது பற்றியும் அவ்விசாரணை கையாள்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்