சினிமா பார்க்கும் பழக்கம் சவூதியர்களிடையே படு வேகமாகப் பிரபலமாகி வருகிறது.
35 வருடங்களாக நாட்டிலிருந்த “சினிமாக்களுக்குத் தடை” சட்டம் சவூதி அரேபியாவில் அகற்றப்பட்டு மூன்று வருடங்களாகிறது. அது மக்களிடையே இருந்த சினிமாத் தாகத்தைப் பெரிதளவில் தீர்த்து வருவதாகத் தெரிகிறது. ஹொலிவூட் சினிமாக்கள் மட்டுமன்றி சவூதி அரேபியாவில் தயாரிக்கப்பட்ட நகைச்சுவைச் சினிமாக்களும் பெரும் கூட்டத்தை ஈர்த்து வருகின்றன.
இஸ்லாமியப் பழமைவாதிகளான வஹாபிய மதகுருக்களின் எதிர்ப்பை இரும்புக் கைகளுடன் கையாண்டு தனது தந்தையான சல்மான் பின் அப்துல் அஸீசின் தலைமையில் பல பொழுதுபோக்கு விடயங்களைச் சவூதிய சமூகத்துக்குத் திறந்துவைத்திருப்பவர் பட்டத்து இளவரசன் முஹம்மது பின் சல்மான் ஆகும். ஒரு பக்கத்தில் அவரது சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புக்கள் சர்வதேச அளவில் தெரிவிக்கப்பட்டாலும் அவருடைய சில நகர்வுகள் நாட்டின் இளைய சமூகத்தினரிடையே பெரும் ஆதரவைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாக்கள் பகிரங்கமாகக் கொட்டகைகளில் வெளியிட ஆரம்பித்த இக்குறுகிய காலத்தில் 16 நகரங்களில் 57 சினிமாக் கொட்டகைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. அவைகளில் மொத்தமாக 500 சினிமாத் திரையரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 149,000 நுழைவுச்சீட்டுகள் மூன்று வருடங்களுக்கு முன்னர் விற்கப்பட்ட சவூதி அரேபியாவில் கடந்த வருடத்தில் 13 மில்லியன் நுழைவுச்சீட்டுக்கள் விற்கப்பட்டிருக்கின்றன. 239 மில்லியன் டொலர் வருமானத்தைக் கடந்த வருடம் ஈட்டிய சினிமாத்துறை ஒரு சில வருடங்களில் ஒரு பில்லியன் டொலர்களைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்