“வழுக்கைத்தலையன் என்று குறிப்பிடுவது ஒருவரைப் பாலியல் துன்புறுத்தல் செய்வதாகும்.”
பிரிட்டனின் தொழிலாளர் நலம் பேணும் அதிகாரத்தின் தீர்ப்பு ஒன்றின்படி வேலைத்தளத்தில் ஒருவரை வழுக்கைத்தலையன் என்று குறிப்பிட்டு அழைப்பது பாலியல் துன்புறுத்தல் செய்வதாகும். தனது தலையில் மயிர் குறைவாக இருந்ததைக் குறிப்பிட்டு தனது மேலாளர் தன்னைத் தரக்குறைவான முறையில் வழுக்கைத்தலையன் என்று குறிப்பிட்டது ஒரு பாலியல் துன்புறுத்தல் என்று குற்றஞ்சாட்டி தொழிலாளர் நலம் பேணும் அதிகாரத்திடம் முறையிட்டிருந்தார். அதற்கான தீர்ப்பிலேயே மேற்கண்ட தீர்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
டொனி வின் என்பவர் பிரிட்டனின் மேற்கு யோர்க் ஷயர் நகரிலிருக்கும் British Bung Company என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். மின்னியல் துறை வல்லுனரான டொனி வின் இயந்திரங்களுடன் வேலை செய்யும் சமயத்தில் குறிப்பிட்ட மேலாளர் தன்னை விழித்துத் தன் தலைமயிரின்மையைக் கேவலமாகக் குறிப்பிட்டு மிரட்டியதாக அவர் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் தன்னை விட 30 வயது இளமையான அந்த மேலாளர் தன்னை அடிப்பதாக மிரட்டியதாகவும் குறிப்பிட்டு தனக்கு வேலைத்தளத்தில் பாதுகாப்பு இல்லையென்று உணர்வதாகவும் முறையிட்டிருந்தார்.
குறிப்பிட்ட நிறுவனத்தின் வழக்கறிஞர் வழுக்கை பெண்களுக்கும் ஏற்படலாம் என்று வாதிட்ட போது அது ஆண்களுக்குத்தான் பெருமளவில் உண்டாகிறது என்று குறிப்பிட்ட தொழிலாளர் நல அதிகாரத்தின் நீதிபதிகள் வழுக்கைத்தலையன் என்று ஒருவரை அழைப்பது பாலியல் துன்புறுத்தல் தான் என்று ஒன்றுபட்டுத் தீர்ப்பளித்தார்கள்.
இதற்கு முன்னர் தொழிலாளர் நலம் பேணும் நீதிமன்றம் சந்தித்த வழக்கொன்றில் ஒரு பெண்ணை வேலைத்தளத்தில் வைத்து அவளது மார்புகள் சிறியவை என்று குறிப்பிட்டு இழிவுசெய்ததை ஒப்பிட்ட நீதிபதிகள், “ஒரு ஆணின் வழுக்கைத்தலையை இழிவுபடுத்துவது ஒரு பெண்ணின் மார்பைச் சுட்டிக்காட்டி இழிவு செய்வதற்கு ஈடானது,” என்று குறிப்பிட்டார்கள்.
நடந்தவற்றை வழக்காக்குவது தனது நோக்கமாக இருக்கவில்லை என்று குறிப்பிட்ட டொனி வின் தன்னைப் பழிப்பதைத் தொடர்ந்து தன்னை ஒதுக்கி வைத்து 24 வருடங்கள் தான் ஊழியம் செய்த நிறுவனம் தன்னை வேலையிலிருந்து நீக்கியதாகவும் குறிப்பிட்டார். குறிப்பிட்ட இழிவுபடுத்தலைத் தான் நகரப் பொலீசில் பதிவுசெய்ததாலேயே தன் மீது பொய்யான காரணங்களைச் சோடித்து வேலையிலிருந்து விலக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பிட்ட நிறுவனம் தவறான வேலை நீக்கம், பாலியல் துன்புறுத்தல் ஆகியவற்றைச் செய்திருப்பதாக நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்