தினேஷ் கார்த்திக்| ஐபிஎல் கோப்பை மற்றும் இரண்டு ICC கோப்பைகளை வென்றவர்
தினேஷ் கார்த்திக் விளையாடிய சர்வதேச அளவில் பலராலும் பார்க்கப்படும் வகையில் இறுதி போட்டி இன்றைய போட்டியாகத்தான் இருந்திருக்கும்
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவர் இன்னும் ஓய்வு பெறவில்லை என்றாலும், இதற்கு மேல் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கப்போவதில்லை.
அதிகப்பட்சம் ரஞ்சி, விஜய் ஹசாரே, முஷ்டாக் அலி, புச்சிபாபு போன்ற தொடர்களில் ஆடலாம்.
RCB அணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், RCB அணியின் கோப்பைக் கனவு தொடர்ந்தாலும், தினேஷ் கார்த்திக் ஏற்கனவே ஐபிஎல் கோப்பையை வென்றவர் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆம் 11 ஆண்டுகளுக்கு முன்னரே! 2013 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிய போது அந்த அணியில் கார்த்திக் சிறப்பாக ஆடி கோப்பையை வென்றார். அந்தத் தொடரில் அவர் 510 ரன்களை குவித்தார்.
அதன் பயனாகவே 2013 சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இடம்பிடித்து, கோப்பை வென்ற அணியிலும் பங்களிப்பை அளித்திருக்கிறார்.
தோனிக்கு முன்பே அறிமுகமானாலும், தோனியின் வருகைக்கு பின்னர், தன்னுடைய திறமையை மெருகூட்டி டெஸ்டில் தொடக்க ஆட்டக்காரர், ஒருநாள் போட்டிகளில் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன் எனப்பல ரோல்களை செய்திருக்கிறார்.
சர்வதேச போட்டிகளில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை என்றாலும், அவர் பலருக்கும் கிடைக்காத கோப்பைகளை வென்ற அதிஷ்டகரமான வீரராகத்தான் இருந்திருக்கிறார்.
ஆம் 2007 T20 உலகக்போப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை, 2013 ஐபிஎல் கோப்பை என முக்கியமான கோப்பைகளையும் வென்றுவிட்டார். அவருக்கு கிடைக்காதது ஒருநாள் உலகக்கோப்பை மட்டும் தான்.
2007 உலகக்கோப்பை அணியில் இடம் கிடைத்தாலும் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. 12 வருட காத்திருப்புக்கு பின்னர், 2019 இல் சில போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கோப்பைத்தான் கிடைக்கவில்லை.
இதுவரை நடைபெற்ற 17 ஐபிஎல் தொடரிலும் ஆடிய 7 வீரர்களில் ஒருவரான தினேஷ் கார்த்திக் அப்பட்டியலில் இருந்து விடைப்பெற்றிருக்கிறார்.
இன்னும் தோனி, கோலி, தவான், ரோகித், சஹா, மணிஷ் பாண்டே மட்டும் அப்பட்டியலில் தொடர்கிறார்கள். இப்பட்டியலில் தொடரும் வாய்ப்பு கோலி மற்றும் ரோகித் சர்மாவிற்கு மட்டுமே இருக்கிறது.
வாழ்க்கையில் பல்வேறு சங்கடங்களை, துரோகங்களை சந்தித்து, விளையாட்டில் பல்வேறு சறுக்கல்களை சந்தித்தாலும் வாழ்விலும், விளையாட்டிலும் அவர் மீண்டு வென்ற விதம் அனைவருக்குமே முன்னுதாரணம் தான்!
விரைவில் சர்வதேச லீக் மற்றும் லெஜண்ட் கிரிக்கெட் போட்டிகளில் பார்ப்போம் தினேஷ் கார்த்திக்!
எழுதுவது : ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி