‘இறை’ தேடிய மனம்..!
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
விவேகானந்தர் ஆக்கம் *கவிதை ரசிகன்* குமரேசன்
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
விஸ்வநாத் தத்தாவும்
புவனேஸ்வரி தேவியும்
1863 சனவரி 12-ல்
ஒரு “ஆன்மிகத்தை”
பெற்றெடுத்தனர் ….
பகுத்தறிவு தொட்டிலில்
ஆன்மிகப்பாலூட்டி
விளையாட்டால் வீரமூட்டி
இசைக்கருவிகளால் தாலாட்டி
நரேந்திரனாக வளர்த்தனர்….
ஏட்டறிவு எல்லாம்
கற்று முடித்தாகி விட்டது
“பகுத்தறிவுக்கு” மட்டும்
பசி தீரவே இல்லை…
ஆம்….
நீ “தத்துவம்”
படித்தாய் அல்லவா ….!!!
எல்லா மனங்களும்
“இரை” த்தேடிப் பறந்தது
உன் மனம் தான்
“இறை”த்தேடிப் பறந்தது
ஆரம்பத்தில் நீ !
எல்லோரிடமும் கேட்டாய்
“தெய்வத்தை பார்த்தீர்களா?
எனக்கு காட்டுங்கள்” என்று
கடைசியில்
“ராமகிருஷ்ணர்”தான்
காட்டினார்
தெய்வத்தை அல்ல….
தெய்வத்தை காண்பதற்கான
வழியை……!
உன் இதய ஆய்வகத்திலேயே
சுய சோதனையின் மூலம்
நீ கண்டு கொண்டாய்
“இறைவன்” இருப்பதை…..
ராமகிருஷ்ணரின்
ஆசிரமத்திற்குள் சென்ற நீ !
பக்தி மார்க்கம்
ஞானம் மார்க்கம் வழியாக
வெளியே வந்தாய்
விவேகானந்தராக…..
துறவியாக
எல்லோரும்
எதை எதையோ இழந்தார்கள்…
நீதான்
ராமகிருஷ்ணர் குருவை
இழந்தாய்…..
துறவியான நீ
நான்கு ஆண்டுகள்
இந்தியாவின்
துணைக் கண்டங்களை
பூமியோடு ஒன்றாக
சுற்றி வந்து
இந்து மதத்தை
உலக அரங்கில்
எவரெஸ்ட் சிகரமாக
எழுந்தருளச் செய்தாய்…..
மதம் உனக்கு
மனைவியானது….
தத்துவம் உனக்கு
பிள்ளையானது….
உலகமே உன் குடும்பமானது…
அமெரிக்காவில் உள்ள
சிகாகோ நகரில்
நீ நின்று
சொற்பொழிவாற்றிய இடம்
வரலாற்றில்
சிம்மாசனம் போட்டு
உட்கார்ந்தது…..
கன்னியாகுமரியில்
தியானம் செய்ய
நீ அமர்ந்த பாறை
கோவிலாக எழுந்தது…..
ஆன்மீகம்
உனது உதிரத்தில் குளித்து
புனிதமடைந்தது…..
நீ வார்த்தைகளால்
ஏணியை
உருவாக்கினாய்….
புத்தகங்களால்
படிக்கட்டுகள் எழுப்பினாய்….
உனது
சொற்பொழிவுகள்
மனித இதயங்களை
பழுது பார்த்ததது….
பிணத்தின் வாயைக் கூட
திறக்க வைத்த பணம்
உன் வாயை
திறக்க வைக்க முடியாமல்
தோற்றுப் போனது…..
தன்னம்பிக்கை
உனது
வார்த்தைகளிலிருந்து
வேர் விட்டு விருட்சமானது…..
அறியாமை இருளைப் போக்க
காவி உடையில்
உதித்த கதிரவன் நீ..!!
கருணை
உனது பார்வையில்
கோயில் கட்டிக் கொண்டது….!!
இளைஞர்கள்
தன் திறமைகளை
உரைத்துப் பார்க்க
நீயோ உரைக்கல்லானாய்…!!
அதனால்தான்
உன் பிறந்த தினத்தை
தேசிய இளைஞர் தினமாகக்
கொண்டாடப்படுகிறது…..
1902 ஜீலை 4
உன் ஆன்மீக
வாழ்க்கையை
முடித்துக் கொண்டு
விண்ணுலகம்
நீ சென்றாலும்…..
நீ தொடங்கி வைத்த
ராமகிருஷ்ணர் ஆசிரமங்கள்
நீ காட்டிய பாதையில்
பயணம்
போய்க்கொண்டு தான்
இருக்கிறது மண்ணுலகில்…. *கவிதை ரசிகன்*
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱