தேசத்தை உயர்த்தும் சக்தி..!

📚📚📚📚📚📚📚📚📚📚📚

எழுத்தறிவு தினக்
கவிதை படைப்பு :*கவிதை ரசிகன்* குமரேசன்

📚📚📚📚📚📚📚📚📚📚📚

மனிதனுக்கு ஆறறிவு இல்லை
ஏழு அறிவு
இந்த எழுத்தறிவியும் சேர்த்து….

வளமற்று
கிடக்கும் மூளையை
வயலாக்கும் உழவன்….

பாலையாய்
இருக்கும் மனதை
சோலையாய்
மாற்றும் பாட்டாளி……

எழுத்துக்கள் தெரியாமல்
இருட்டில் இருக்கும்
கண்களுக்குள்
ஏற்றி வைக்ப்படும்
நந்தா விளக்கு…..

சிந்தனை
இதிலிருந்து தான்
வேர் விட்டு விருட்சமாகிறது….

இது கேட்டதை எல்லாம்
கொடுக்கும்
பூலோகத்திலுள்ள
கற்பகத்தரு…..

வாள் முனையை விட
பேனா முனை
கூர்மையானது தான் …..
அந்தக் கூர்மை
எழுத்தறிவு கல்லில் தான்
சாணைப் பிடிக்கப்படுகிறது….

ஒரு மனிதனையோ
ஒரு ஊரையோ
ஒரு மாவட்டத்தையோ
ஒரு மாநிலத்தையோ அல்ல
ஒரு தேசத்தையே !
உயர்த்தும் சக்தி
இதற்கு மட்டுமே உண்டு…..

எழுத்தறிவு பெற்றவர் என்பது
கலெக்டர் நாற்காலியை
பிடிப்பதல்ல…..
கைநாட்டு வைக்காமலும்
படித்துக்காட்டு என்று
கைக்கட்டி நிற்காமலும்
இருப்பதே…..!

மனிதர்களைப் பிரிக்க
கட்டப்பட்டிருக்கும்
ஜாதி மதம்
இனப் பாகுபாட்டை இடித்து
சமத்துவத்தை உண்டாக்கும்
கடப்பாறை…..

ஊமையாய்
இருக்கும் விரல்களை
பேச வைக்கும் வைத்தியர்…

எழுத்தறிவு இல்லாதவர்கள்
புத்தகத்தின்
அருமை தெரியாத
கரையான்களே…..

கற்பனையில் கருவுறும்
கவிதை
கதை
கட்டுரைகளை பிரசவிக்கும் கர்ப்பப்பை……

எழுத்தாகிய தன்னை
அறிவித்தவர்களை
இறைவனாகவே
மாற்றிவிடும் என்றால்….
அதன் பெருமை
அருமையை விளக்க
வேறு ஏதேனும் வேண்டுமோ…? *கவிதை ரசிகன்*

📚📚📚📚📚📚📚📚📚📚📚

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *